தினகரன் 04.08.2010
அனகாபுத்தூரில் ரூ45 லட்சம் ஒதுக்கீடு செய்தும் குடிநீர் தொட்டி கட்டவில்லை
தாம்பரம், ஆக. 4: அனகாபுத்தூர் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் 11 லட்சம் லிட்டர் குடிநீர் பெற்று, நகராட்சி சார்பில் குடியிருப்புகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை.
இதனால், 14, 15, 16 வார்டுகளில் உள்ள கணபதி நகர், விநாயகம் நகர், சீனிவாசபுரம், காமராஜபுரம், செந்தில் நகர் போன்ற பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தண்ணீர் வழங்கப்படும் நேரமும் மிகவும் குறைவாக உள்ளது. குடிநீர் பிரச்னையை தீர்க்க, அனகாபுத்தூர் 16வது வார்டில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கியது. 25 சதவீதம் முடிந்தநிலையில், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதிகாரிகளை கேட்டால் ‘ஒப்பந்ததாரர்களுக்கும், வேலையாட்களுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பணி நடைபெறவில்லை‘ என்கின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.