தினமலர் 14.12.2010
சிறப்பு சாலை திட்டத்தில் ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கீடு
தாராபுரம்: சிறப்பு சாலை திட்டத்தில், தாராபுரம் நகராட்சியில் தார் சாலை மற்றும் சிமென்ட் தளம் அமைக்க ரூ.4.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது; இப்பணி நேற்று துவங்கியது. தாராபுரம் நகராட்சி கமிஷனர் துரை கூறியதாவது:
தாராபுரம் நகராட்சி பகுதியில் சிறப்பு சாலை திட்டத் தில் 2010-11ம் ஆண்டுக்கு நான்கு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தார் தளம் அமைக்க, 6,453 கி.மீ., சுற்றளவில் ரூ.2.46 கோடி மதிப்பீடு, சிமென்ட் தளம் அமைக்க 2,948 கி.மீ., சுற்றளவில் ரூ.1.59 கோடி மதிப்பீடு போடப்பட்டது. கொட்டாப்புளிபாளையம் ரோடு, காந்திபுரம், கிழக்கு பெரியார் தெரு, பாரதியார் தெரு, பூக்கார தெரு, என்.என்., பேட்டை குறுக்கு தெரு, மாரியம்மன் கோவில் தெரு, சுல் தானியா தெரு பகுதிகளில் சிமென்ட் தளம் அமைத்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்க உள்ளது.
ஆசிரியர் காலனி, முத்து நகர், கிருஷ்ணா நகர், நாமகிரி மின் நகர், கண்ணன் நகர், வேம்பண கவுண்டர் லே–அவுட், முருகன் கல்யாண மண்டபம் தெரு, பீமர் அக்ரஹாரம், கிழக்கு பெரியார் தெரு, அலங்கியம் ரோடு குறுக்கு தெரு, பாரதியார் தெரு, சக்தி நகர் பகுதிகளில் தார் சாலை அமைத்து, மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடக்க உள்ளது. என்.என்., பேட்டை தெருவில் தார் சாலை அமைத்தல், விஷ்ணுலட்சுமி நகர், எல்லீஸ் நகர், செட்டியார் தோட்டம், சிவசக்தி நகர், சரஸ்வதி நகர், என்.ஆர்.பி., நகர், ஆர்.கே., நகர், குளத்துப்புஞ்சை தெரு பகுதிகளிலும் தார் சாலையுடன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடக்க உள்ளது. இதில், தார் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது, என்றார். நகராட்சி நிர்வாக இன்ஜினியர் தங்கராஜ் உடனிருந்தார்.