தினமலர் 27.07.2012
ரூ.458 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு திட்டம்
திருப்பூர்:”திருப்பூர் மாநகராட்சியில், 458 கோடி ரூபாயில் குடிநீர் வினியோக மேம்பாட்டு திட்டமும், 318 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டத்தையும் செயல்படுத்தலாம்,’ என, புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் திட்ட அறிக்கை தயாரித்துள்ளது.திருப்பூர் மாநகராட்சியில், 20 வார்டுகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகம், அத்திட்டத்தை நிர்வகித்து வருகிறது. ஒருங்கிணைந்த மாநகராட்சி எல்லைகளில், அனைத்து வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக, மாநகராட்சி நிர்வாகம் மதிப்பீடு கோரியிருந்தது.புதிய திருப்பூர் மேம்பாட்டு கழக அதிகாரிகள், அதற்கான அறிக்கையை தயாரித்து அளித்துள்ளனர். பாதாள சாக்கடை திட்டம் 318 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தயாரிக்க, திட்ட மதிப்பீட்டில் 0.35 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கோடியே 11 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பொது நிதியில் இருந்து வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சி திட்டம் செயல்படுத்தும்போது, இத்தொகையை திரும்ப பெற வழிவகை உள்ளது. எனவே, பொது நிதியில் இருந்து தொகை வழங்க மாநகராட்சி நிர்வாகம் உத்தேசித்துள்ளது.
குடிநீர் திட்டம்
மாநகராட்சி முழுவதும் சீராக குடிநீர் சப்ளை செய்வதற்கான திட்டத்தையும் தயாரித்துள்ளது. அதன்படி, 458 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. புதிய திட்ட அறிக்கை தயாரிப்புக்கான கட்டண தொகையான, ஒரு கோடியே 60 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தில் திரும்ப பெற வழிவகை உள்ளதால், பொது நிதியில் வழங்க மாநகராட்சி உத்தேசித்துள்ளது. வரும் 30ல் நடக்கும் மாமன்ற கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளது.