தினகரன் 26.08.2010
விளாங்குடி மார்க்கெட்டில் கட்டமைப்பு வசதிக்காக ரூ4.64 கோடி பணம் கேட்டு மாநகராட்சி நோட்டீஸ் ஐகோர்ட் கிளை தடை
மதுரை, ஆக. 26: விளாங்குடி மார்க்கெட், அலங்காநல்லூர் உணவு தானிய யார்டில் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தியதற்காக பணம் செலுத்தக்கோரி மதுரை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. விளாங்குடி மார்க்கெட் தலைவர் மனுவேல் ஜெயராஜ், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: விளாங்குடியில் 15.25 ஏக்கரில்
ரூ15.5 கோடி மதிப்பில் புதிய காய்கறி மார்க்கெட் கட்டியுள்ளோம். இங்கு 2009ம் ஆண்டிலிருந்து வியாபாரம் நடந்து வருகிறது. மார்க்கெட்டிற்கு செல்ல கொண்டமாரி ஓடையில் ரூ.45 லட்சத்தில் பாலம், ரூ.2 கோடியில் இணைப்பு சாலைகள், தெருவிளக்குகள் உட்பட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்க்கெட்டிற்கு கட்டமைப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தியதற்காக ரூ45 லட்சத்து 6 ஆயிரத்து 200 செலுத்த மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. மார்க்கெட்டில் கட்டமைப்பு வசதிகள் எங்கள் சொந்த செலவில் செய்துள்ளோம். அதற்கு மாநகராட்சி பணம் கேட்டது சட்டவிரோதம். அந்த நோட்டீசை ரத்து செய்து தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மதுரை உணவு தானிய விற்பனை யார்டு நிர்வாக இயக்குனர் ரத்தினவேல் தாக்கல் செய்த மனு: அலங்காநல்லூரில் எங்கள் சங்கம் சார்பில் 30 ஏக்கர் நிலம் வாங்கி உணவு தானிய விற்பனை யார்டு அமைத்துள்ளோம். ரூ.4 கோடியே 19 லட்சத்து 65 ஆயிரம் செலவில் கட்டமைப்பு வசதி செய்துள்ளோம். ஆனால் கட்டமைப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிக்காக ரூ70 லட்சத்து 20 ஆயிரம் பணம் செலுத்தும்படி மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதை ரத்து செய்து, இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுக்கள் நீதிபதி எம்.ஜெயபால் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் சுந்தரேசன், சதீஷ்பாபு ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி, கட்டமைப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிக்கு பணம் கேட்டு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.