தினமணி 08.12.2010
சென்னை திருமங்கலத்தில் ரூ 47 கோடி செலவில் மேம்பாலம்: அமைச்சர் தகவல்
சென்னை, டிச.8: சென்னையில் திருமங்கலம் சந்திப்பில் அண்ணாநகர்–முகப்பேரை இணைக்கும் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அடையாறு திரு.வி.க.பாலம் அருகே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் மு.பெ.சாமிநாதன் இன்று அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் பேசுகையில், சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அடையாறு திரு.வி.க.பாலம் அருகே உயர்மட்டப் பாலம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இப்பாலம் 11 மீட்டர் அகலம், 333 மீட்டர் நீளம் கொண்ட மூன்று வழித்தடம் மற்றும் ஒரு பக்கம் மட்டும் நடைபாதையுடன் அமைக்க வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இப்பாலம் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். அண்ணாசாலையில் இரண்டு தொடர் பாலங்கள் கட்ட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ரூ.161 கோடி செலவில் அண்ணா சாலையில் புதிய தலைமைச்செயலகம் அருகில் தொடங்கி பட்டுலாஸ் சாலை சந்திப்பு வரை அமைந்துள்ள வாலாஜா சாலை, பிளாக்கர்ஸ் சாலை, டேம்ஸ் சாலை, ஜெனரல் பேட்டர்ஸ் சாலை (திரு.வி.க.சாலை), எத்திராஜ் சாலை சந்திப்புகளை ஒருங்கிணைத்து சுமார் 1.8 கி.மீ.நீளத்திற்கு நான்கு வழித்தடம் கொண்ட மேம்பாலம் அமைக்க அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ரூ.339 கோடி செலவில், அண்ணா அறிவாலயம் அருகே தொடங்கி சைதாப்பேட்டை மாம்பலம் வாய்க்கால் வரை சுமார் 2.9 கி.மீ.நீளத்திற்கு, தியாகராயர் சாலை – எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, பாரதிதாசன் சாலை, செனடாப் சாலை, வெங்கட நாராயணா சாலை – சேமியர்ஸ் சாலை, சி.ஐ.டி. நகர் முதல் பிரதான சாலை சந்திப்புகளை ஒருங்கிணைத்து நான்கு வழித்தட மேம்பாலம் அமைக்கவும் அரசு கொள்கை அளவில் ஒப்புகை அளித்துள்ளது.
ரூ.47 கோடி செலவில் திருமங்கலம் சந்திப்பில் அண்ணாநகர் – முகப்பேர் இணைக்கும் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் கூறியதாக மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு மேயர் மா.சுப்ரமணியன் தலைமை வகித்தார். நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலர் கோ.சந்தானம் , எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ, மண்டலக்குழு தலைவர் மு.ஜெயராமன், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் பா.அரிராஜ், தலைமைப் பொறியாளர் தி.சேகர், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளர் அபிஷேக்ராஜ் நாதன் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.