தினமணி 26.07.2012
ரூ.4.85 கோடியில் புதுப்பொலிவு பெறும் மெரினா! கடலில் குளிக்க நிரந்தரத் தடை விதிக்கத் திட்டம்
சென்னை, ஜூலை 25: உலகிலேயே 2-வது நீண்ட, பெரிய கடற்கரையான சென்னை மெரினா கடற்கரை ரூ.4.85 கோடி செலவில் அழகுபடுத்தப்பட உள்ளது. மேலும், அங்கு கடலில் பொதுமக்கள் குளிப்பதற்கு நிரந்தரத் தடை விதிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், சென்னையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரையை அண்ணா நினைவிடம் முதல் பட்டினப்பாக்கம் வரையில் சுமார் 13 கி.மீ. தூரத்துக்கு அழகுபடுத்துதல் மற்றும் ஆங்காங்கே உள்ள சிறு கடைகளை முறைப்படுத்தும் பணிக்கான திட்ட மதிப்பீடு ரூ.4.85 கோடிக்கு மன்றத்தின் அனுமதி அளிக்கப்பட்டது.
இதுவரையில் பொதுப் பணித் துறையின் பராமரிப்பில் இருந்து வந்த மெரினா கடற்கரை 24.10.2011 முதல் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடற்கரையின் மணல் பரப்பை மாநகராட்சி பொறுப்பில் எடுத்துக் கொள்வதற்காக நில அளவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இப்போது அங்குள்ள தாற்காலிக கடைகளை கணக்கெடுக்கும் பணி காவல் துறை மற்றும் சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த கணக்கெடுப்புப் பணி முடிவடைந்த பின்பு மணல் பகுதியில் 3 இடங்களில் மட்டும் காவல்துறை ஒத்துழைப்புடன் வரிசையாக கடைகள் அமைக்கவும், இதர மணல் பகுதியை தூய்மைப் பகுதியாகவும், கடைகளை வைக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடற்கரை பகுதி சுத்தமாகவும், பொதுமக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். இப்போது கடைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதை அறிந்து கொண்டு புதிதாக புற்றீசல்கள் போல முளைத்துள்ள கடைகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், ரூ.4.13 கோடி செலவில் மின் இணைப்புடன் கூடிய இழுவிசைக் கூரை கொண்ட கடைகள் அமைக்கப்படும். கண்ணகி சிலை பின்புறமும், நீச்சல் குளம் பின்புறமும் சுமார் ரூ.60 லட்சம் செலவில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படும். காமராஜர் சாலையிலிருந்து மெரினா அணுகு சாலை சந்திப்பில் ரூ.2.24 லட்சம் செலவில் தடுப்புக் கதவு அமைக்கப்படும்.
மேலும், படகு வைக்கப்படும் இடத்தை அழகுபடுத்தும் வகையில் ரூ.7 லட்சம் செலவில் மூங்கில் தடுப்பு அமைத்தல் மற்றும் ரூ.3 லட்சம் செலவில் காவல்துறை கண்காணிப்பு உயர்கோபுரம் அமைத்தல் பணி மேற்கொள்ளப்படும் என மாமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய உறுப்பினர்களில் சிலர், மெரினா கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இங்கு கடலின் ஆழம் மற்றும் அலைகளின் வேகத்தைக் கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை உள்ளது. எனினும், சுற்றுலாப் பயணிகள் குளிப்பது தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலளித்து மேயர் பேசும்போது, மெரினா கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதைத் தடுக்க எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளை வைக்கவும், அங்கு பொதுமக்கள் குளிப்பதை நிரந்தரமாகத் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.