தினமணி 08.02.2010
பெரம்பலூரில் 49 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து
பெரம்பலூர், பிப். 7: பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 49 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாமை மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் ஞாயிற்றுகிழமை தொடக்கிவைத்தார்.
பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமைத் தொடக்கி வைத்து, ஆட்சியர் பேசியது:
இந்தியாவில், இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து புகட்டப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஜன, 10ம் தேதி நடைபெற்ற முகாமில் 49,742 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என 343 மையங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. பணியில், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்ட 1,372 பேர் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம், சுமார் 49,000 குழந்தைகள் பயனடைவர். பொதுமக்கள் அனைவரும், தங்களது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே சொட்டு மருந்து புகட்டியிருந்தாலும், மீண்டும் புகட்டலாம் என்றார் ஆட்சியர்.
நலப் பணிகள் இணை இயக்குநர் ஜி. குணகோமதி, துணை இயக்குநர் ஆ. மோகன், உதவி இயக்குநர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ், பூச்சியியல் உதவியாளர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ச. பாலுசாமி, மாவட்ட ரோட்டரி தலைவர் ஜே. அரவிந்தன், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் சி. விவேகானந்தன், வட்டாட்சியர் ஜெயராமன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.