தினமலர் 19.08.2010
சாலைகளை சீரமைக்க ரூ.4.99 கோடி ஒதுக்கீடு
ஊட்டி : ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளை சீரமைக்க ரூ.4 கோடியே 99 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊட்டி நகரமன்ற அவசரக் கூட்டம், நேற்று நடத்தப்பட்டது. சிறப்பு சாலைகள் சீரமைக்கும் திட்டம், 2010-“11ம் ஆண்டில், அனைத்து நகராட்சிகளிலும் நிறைவேற்ற, சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன்படி, செயின்ட் தாமஸ் சர்ச் சாலை, பாட்னா ஹவுஸ் சாலையில் 1.76 கி.மீ.,க்கு 48.70 லட்சம், அணிக்கொரை சாலை, லோயர்வுட் ஹவுஸ் சாலை மற்றும் ஹிக்கின்ஸ் சாலையில் 3.59 கி.மீ.,க்கு 69.50 லட்சம், பழைய அக்ரஹாரம் சாலை, ஆட்லி சாலை, கீழ்கோடப்பமந்து சாலை, மெயின்பஜார் சாலை, அப்பர் பஜார் சாலையில் 3.20 கி.மீ., தூரத்துக்கு 69.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரிட்சிங் காலனி பைபாஸ் சாலை, கிராண்டப் சாலை மற்றும் டைகர்ஹில் சாலையில் 5.19 கி.மீ.,க்கு 96.30 லட்சம், ரெட்கிராஸ் சாலை, தீட்டுக்கல் சாலை, ஆரம்பி ஹவுஸ் சாலை 2.43 கி.மீ.,க்கு 75 லட்சம், ஆர்.கே.புரம் சாலை, கிளன்ராக் சாலையில் 3.07 கி.மீ.,க்கு 96 லட்சம், விஜயநகரம் காலனி சாலை மற்றும் எல்க்ஹில் சாலையில் 2.36 கி.மீ.,க்கு 44.20 லட்சம், நகராட்சிக்கு உட்பட்ட 21.60 கி.மீ., தூர சாலையை சீரமைக்க, 4 கோடியே 99 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. தொகையை ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.