தினத்தந்தி 27.06.2013
5 லட்சம் இலவச கொசு வலைகள் அம்மா உணவகத்தை நிர்வகிக்க தனித்துறை
– 11 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில்
72 தீர்மானங்கள் நிறைவேறின
11 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைத்தல், 5 லட்சம் இலவச கொசுவலைகள்
வழங்குதல் உள்பட 72 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சாதாரண மன்ற கூட்டம்
சென்னை மாநகராட்சியின் சாதாரண மன்ற கூட்டம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள
கூட்ட அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி
தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர், துணை மேயர்
பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தை மேயர் சைதை துரைசாமி
திருக்குறள் விளக்கவுரை மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியுடன்
தொடங்கினார். அதைத் தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்றது. மேலும் சிறப்பு கவன
ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.
அதைத் தொடர்ந்து கூட்டத்தில் 72 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான தீர்மானங்கள் விவரம் வருமாறு:–
11 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள்
- சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 11 இடங்களில் புதிய
மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பாதசாரிகள் சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கான
விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி.
அதன்படி டாக்டர் எம்.ஜி.ஆர்.சாலை, திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பு
மற்றும் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை சந்திப்பில் மேம்பாலம், மத்திய கைலாஷ்
சந்திப்பில் இருந்து பறக்கும் ரெயில் நிலையத்திற்கு இணையாக பக்கிங்காம்
கால்வாய்க்கு குறுக்கே, கஸ்தூரிபாய் ரெயில் நிலையத்தில் இருந்து
கோட்டூர்புரம் நோக்கி மேம்பாலம், டி.டி.கே. சாலை– செயின்ட் மேரீஸ் சாலை,
சேமியர்ஸ் சாலை மற்றும் அடையாறு சந்திப்பில் மேம்பாலம், விருகம்பாக்கம்
காளியம்மன் கோவில் தெரு மற்றும் என்.எஸ்.கே. சாலை சந்திப்பில் மேம்பாலம்,
கோடம்பாக்கம், என்.எஸ்.கே. சாலையில் மீனாட்சி பொறியியல் கல்லூரி அருகில்
பாதசாரிகள் சுரங்கப்பாதை.
புரசைவாக்கம் நெடுஞ்சாலையில்…
என்.எஸ்.கே. சாலையில், வடபழனி பேருந்து நிலையம் அருகில் பாதசாரிகள்
சுரங்கப்பாதை, காமராஜர் சாலையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு
அருகில் பாதசாரிகள் சுரங்கப்பாதை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை (கங்காதீஸ்வரர்
கோவில் சாலை) அருகில் பாதசாரிகள் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை
மற்றும் அயனாவரம் மேடவாக்கம் டாங்க் சாலை சந்திப்பு அருகில் பாதசாரிகள்
சுரங்கப்பாதை.
கொருக்குப்பேட்டை மற்றும் வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையில்
எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள சந்தி கடவு ரெயில் மேம்பாலம்–சுரங்கப்பாதை,
கொருக்குப்பேட்டை மற்றும் வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையில் மணலி
சாலையில் உள்ள சந்திக்கடவு ரெயில் மேம்பாலம்–சுரங்கப்பாதை ஆகிய 11
இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
- சென்னை மாநகராட்சி துப்புரவு பணிகளுக்கு தேவையான 1,100 லிட்டர்
கொள்ளளவு கொண்ட இரும்பு உலோகத்தினால் ஆன 2 ஆயிரம் காம்பாக்டர் குப்பை
தொட்டிகள் வாங்குவதற்கு அனுமதி.
தனித்துறை
- அம்மா உணவகத்திற்காக தனித்துறை அமைத்து 3 வட்டார அலுவலகங்கள் மற்றும்
15 மண்டல அலுவலகங்களில் 111 பணியாளர்களை பணி அமர்த்துவது தொடர்பாக அரசின்
அனுமதி பெறுதல்.
- சென்னையில் கொசுத் தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும் மலேரியா,
டெங்கு, யானைக்கால் நோய் போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல்
இருக்க நீர் வழிப்பாதை ஓரம் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும்
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடிசைவாழ் மக்களுக்கும், சாலை ஓரம் வசிக்கும்
மக்களுக்கும் இலவசமாக கொசுவலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக
ரூ.7 கோடியே 50 லட்சம் செலவில் 5 லட்சம் கொசு வலைகள் கொள்முதல் செய்ய
அனுமதி பெறுவது.
- சென்னை மாநகராட்சி தெருவிளக்கு கம்பங்களில் கேபிள் டி.வி. ஒயர்
கட்டுவதற்கான வாடகை தொகையை உயர்த்துவதற்கும், நிலுவைத் தொகையை
வசூலிப்பதற்கும் அரசின் அனுமதி பெறுதல்.
72 தீர்மானங்கள்
- சென்னையில் உள்ள 30 முக்கிய சாலைகளை மேம்படுத்தப்பட்ட வழித்தடங்களாக
உலக தரத்திற்கு ஒப்பாக சீரமைக்கும் பணி தொடர்பாக பெறப்பட்ட விரிவான திட்ட
அறிக்கை குறித்து அரசின் அனுமதி பெறுவது.
- ரூ.300 கோடி திட்டத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் தெரு விளக்கு கம்பங்கள் அமைப்பது தொடர்பாக அரசிடம் பின்னேற்பு அனுமதி பெறுவது.
- ரிப்பன் கட்டிடம் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு துறை ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
-
சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களிலேயே பிறப்பு மற்றும் இறப்பு
சான்றிதழ்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் முறையை அமல்படுத்த அனுமதி
பெறுவது உள்பட 72 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.