தினமணி 09.11.2009
குடிநீர்க் குழாய்கள் வெள்ளத்தில் உடைப்பு கடையநல்லூரில் 5 நாள்கள் குடிநீர் நிறுத்தம்
கடையநல்லூர், நவ. 8: கடையநல்லூர் நகராட்சி குடிநீரேற்றும் நிலையத்தில், ராட்சத குழாய்கள் சனிக்கிழமை இரவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதனால், கடையநல்லூர் நகராட்சியில் 5 நாள்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடையநல்லூர் மற்றும் கருப்பாநதி அணைப் பகுதியில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால், கருப்பாநதி அணைக்கு வரும் நீரின் அளவு 5000 கன அடியை எட்டியது.
ஏற்கெனவே அணை நிரம்பிய நிலையில் அணைக்கு வரும் 5000 கன அடி தண்ணீரும் கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டது. இந்த வெள்ளத்தில், பெரியாற்றுப் படுகையில் உள்ள நகராட்சி நீரேற்றும் நிலையத்தில் ராட்சத குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டன.
அதிகாரிகள் ஆய்வு:
இப்பகுதியினை நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் மோகன், செயற்பொறியாளர் தேவராஜன், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் இப்ராஹிம், உதவிப்பொறியாளர் மைதீன், சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கர், கைலாசம், நகர்மன்ற உறுப்பினர் ராமநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மண்டல இயக்குநர் மோகன் கூறியதாவது: குடிநீர்க் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பெரிய மரம் விழுந்ததில் நீரேற்றும் நிலையத்திற்கு செல்லும் இரும்புப் பாலமும் உடைந்துள்ளது.
அருகேயுள்ள நகராட்சிகளிலிருந்து குழாய்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் 5 நாள்களில் நிறைவு பெறும். எனவே, 5 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என்றார்.
சலவைத் தொழிலாளர்கள் பாதிப்பு: சலவைத் தொழிலாளர்கள் ஆற்றில் துணிகளை வெளுத்து, பெரியாற்றுப் படுகையின் கரையோரங்களில் மூட்டையாகக் கட்டி வைத்திருந்தார்கள். இந்த துணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், அவர்கள் வேதனையுடன் திரும்பிச் சென்றனர்.