தினகரன் 24.12.2009
சாலையில் குப்பை கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் நிச்சயம்
பழநி: பழநி நகராட்சி அலுவலகத்தில் வியாபார கடைகள், மடங்கள், ஓட்டல்கள், லாட்ஜ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர்மன்றத்தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். ஆணையர் சித்திக், நகரமைப்பு அலுவலர் உத்திரபதி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வியாபார கடைகள், மடங்கள், ஓட்டல்கள், லாட்ஜ்கள் குப்பை சேகரிப்பு தொட்டிகள் ஏற்படுத்தி, குப்பைகளை அதில் சேகரித்து நகராட்சி வாகனங்களில் கொட்ட வேண்டும். மீறி சாலைகளில் குப்பை கொட்டுவோருககு ரூபாய் 5ஆயிரம் அளவிற்கு அபராதம் விதிக்கப்படும். பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பேருந்து நிலையம் எதிர்புறம், தேவர்சிலை பின்புறம், ஆண்டவன் பூங்கா சாலை என 3 பகுதிகளில் இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்க திருக்கோயில் நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. துப்புரவு பணிக்காக 51 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கூடுதலாக மேலும் 50 பணியாளர்கள் என 101 பணியாளர்கள் 16 மணி நேரம் தொடர்ந்து பணிபுரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு தரவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சையது அபுதாகீர், மணிகண்டன், அனீபா, நெடுமாறன், மதுரைவீரன், பி.மணிகண்டன் செய்திருந்தனர்.