தினத்தந்தி 31.08.2013
5 பஞ்சாயத்துகளுக்கு ரூ.282¼ கோடி மதிப்பில்ஒருங்கிணைந்த
குடிநீர் திட்டம் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
தூத்துக்குடி மாநகராட்சியுடன்
இணைக்கப்பட்ட 5 பஞ்சாயத்துகளுக்கு ரூ.282 கோடியே 44 லட்சம் மதிப்பில்
ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மாநகராட்சி கூட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம்
நேற்று மாலை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர்
சசிகலா புஷ்பா தலைமை தாங்கினார். துணை மேயர் சேவியர், ஆணையாளர் மதுமதி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கவுன்சிலர் பெரியசாமி பேசும்
போது, தூத்துக்குடி ஒருங்கிணைந்த பஸ்நிலையம் எப்போது செயல்படுத்தப்படும்,
அதன் நிலை என்ன என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்து பேசிய மேயர் சசிகலா
புஷ்பா, ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கு மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு
செய்தது. மாவட்ட நிர்வாகம் ஒரு இடத்தை தேர்வு செய்தது. இதில் ஒருமித்த
கருத்து ஏற்படவில்லை. இதனால் தனியார் நிறுவனம் மூலம் வாய்ப்பான இடத்தை
தேர்வு செய்ய டென்டர் விடப்பட உள்ளது, என்று கூறினார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில், தூத்துக்குடி
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ள 5 பஞ்சாயத்துகளுக்கும் சேர்த்து
ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் ரூ.282 கோடியே 44 லட்சம் மதிப்பில்
செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு நகர்ப்புற
உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் கடன் மற்றும் மானியங்களின்படி இந்த
திட்டம் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு தமிழ்நாடு
நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதிசேவை நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் 25
சதவீதம் கடன் தொகையான ரூ.70 கோடியே 61 லட்சத்துக்கான நிபந்தனைகள்
அங்கீகரிப்பது, துறைமுக நிதியில் இருந்து பூங்காக்களை சீரமைப்பது என்பது
உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள்,
அதிகாரிகள் கலந்து கொண்டனர்.