தினமணி 23.03.2010
குளிர்பானங்களில் கலப்படம்:5 ஆயிரம் பாக்கெட்டுகள் பறிமுதல்
திருநெல்வேலி, மார்ச் 22: திருநெல்வேலியில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக 5 ஆயிரம் குளிர்பான பாக்கெட்களை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். இம் மாநகர் பகுதியில் உள்ள குளிர்பானக் கடைகளில், கலப்பட செய்யப்பட்ட மோர்,தயிர்,ரஸ்னா,பாதாம்பால் ஆகியவை விற்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரனுக்கு புகார்கள் வந்தன.
அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் பாஸ்கரன், சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநகர சுகாதாரத் துறை அலுவலர் கலு. சிவலிங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர்கள் அ.ரா.சங்கரலிங்கம், காளிமுத்து மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சந்திப்பு பகுதியில் உள்ள ஜூஸ் கடைகள், கரும்புச் சாறு கடைகள், குளிர்பான பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் திங்கள்கிழமை சோதனையிட்டனர்.
கொக்கிரகுளம், உடையார்பட்டியில் உள்ள குளிர்பானத் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனையிட்டதில், அங்கு உணவு கலப்பட தடைச்சட்டத்தை மீறியும், பல்வேறு விதிமுறைகளை மீறியும் ரஸ்னா,
பாதாம்பால் ஆகிய குளிர்பானங்கள் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்த குளிர்பானங்களைக் கைப்பற்றி, அந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோல கடைகளில் கலப்படம் செய்யப்பட்ட மோர்,தயிர்,ரஸ்னா,பாதாம்பால் ஆகிய குளிர்பான பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சந்திப்பில் சில பழக்கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு பழஜூஸ் தயார் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த அழுகிய வாழைப்பழத் தார்களைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் சந்திப்பு பஸ் நிலையத்தின் உள்ளே சில கரும்புச்சாறு கடைகளில், கரும்புச்சாற்றில் கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சாக்ரீனை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தச் சோதனையில் மொத்தம் 5 ஆயிரம் கலப்பட குளிர்பான பாக்கெட்டுகள், 5 அழுகிய வாழைப்பழத் தார்கள், சாக்ரீன் ஆகியவற்றை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை கிருமிநாசினி தெளித்து அழித்தனர்.
மாநகராட்சி அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால் மாநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.