தினமலர் 05.05.2010
ரூ.5 கோடி செலவில் பசுமை மயான திட்டம் : மேயர் தகவல்
சென்னை : சென்னையில் ஐந்து கோடி ரூபாய் செலவில் 10 மயான பூமிகளை பசுமை நிறைந்ததாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேயர் சுப்ரமணியன் கூறினார்.
ஈரோடு, மதுரை நகரங்களில் மயான பூமிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு, சிறந்த முறையில் பசுமையுடன் பராமரிக்கப்படுகிறது. அதுபோல், சென்னை நகரில் இருக்கும் மயான பூமிகளை தன்னார்வ அமைப்புகளிடம் ஒப்படைப்பது தொடர்பாக, ரிப்பன் கட்டடத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேயர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். கமிஷனர் ராஜேஷ் லக்கானி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஈரோட்டில் மயானத்தை பராமரிக்கும் தன்னார்வ அமைப்பைச் சார்ந்த டாக்டர் சதாசிவம் கலந்து கொண்டு, மயானத்தை பராமரிக்கும் முறையை விவரித்தார். சென்னையில் உள்ள 30க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மேயர் சுப்ரமணியன் பேசியதாவது: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 38 மயானங்களிலும் பிரேதங்கள் அடக்கம் செய்வது இலவசம் ஆக்கப் பட்டுள்ளது. அதோடு பிரேதங்களை பாதுகாப்பாக வைக்க குளிரூட்டு பெட்டிகள், பிரேதங்களை மயானத்திற்கு கொண்டு செல்ல அமரர் ஊர்திகளை மாநகராட்சி இலவசமாக வழங்கி வருகிறது. 11 மயான பூமிகளில் எரிவாயு தகன மேடை வசதி உள்ளது. 18 மயான பூமிகளில், 12 கோடி ரூபாய் செலவில் எரிவாயு தகன மேடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மேலும், 13 மயானங்களில் மின்சார எரிகலன்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. பெசன்ட் நகர், ஜி.கே.எம்., காலனி, வேலங்காடு, ஓட்டேரி, கண்ணம்மாபேட்டை, ஜாபர்கான்பேட்டை, கிருஷ்ணாம் பேட்டை, வியாசர்பாடி, மூலக் கொத்தளம், காசிமேடு ஆகிய 10 மயான பூமிகளில், ஐந்து கோடி ரூபாய் செலவில் பசுமையான புல்வெளிகளுடன் கூடிய எழிலார்ந்த தோட்டத்துடன் மயான பூமிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு, ஈரோட்டில் உள்ள மயானத்தைப் போல், சென்னை நகரில் உள்ள மயான பூமிகளையும் தனியாரிடம் ஒப்படைத்து பராமரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இவ்வாறு மேயர் பேசினார்.
கமிஷனர் ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறியதாவது: நகரில் உள்ள மயான பூமிகளில் வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளில், இரண்டு அல்லது மூன்று மயான பூமிகள் மட்டும் தன்னார்வ அமைப்பிடம் சோதனை முறையில் ஒப்படைக்கப்படும்.
ஒரு பிரேதம் அடக்கம் செய்ய மாநகராட்சியால் செலவிடப்படும் 600 ரூபாய் தொகையை, தன்னார்வ அமைப்பிடம் வழங்கப் பட்டு மயான பூமியை பராமரிக்க ஏற்பாடு செய்யப்படும். புகார்கள் எதுவும் இல்லாமல் தன்னார்வ அமைப்பினர் மயான பூமியை சிறந்த முறையில் பராமரித்தால், மற்ற மயான பூமிகளை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். லாப நோக்கின்றி பராமரிக்கும் அமைப்பினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு கமிஷனர் கூறினார்.