தினமணி 05.05.2010
திருச்சி மாவட்டத்தில் எரிவாயு இணைப்பு இல்லாதவர்களுக்கு 5 லிட்டர் மண்ணெண்ணெய்
திருச்சி, ஏப். 4: திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் எரிவாயு இணைப்பு இல்லாதவர்களுக்கு 5 லிட்டரும், ஒரு எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு 3 லிட்டரும் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பொது விநியோகத் திட்டம் மூலம் புதிதாக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளில் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத மற்றும் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ளவர்களுக்கு 2008, ஆகஸ்ட் மாதம் முதல் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள எரிவாயு இணைப்பு இல்லாத புதிதாக வழங்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2010, ஏப்ரல் மாதம் மட்டும் 5 லிட்டர் மண்ணெண்ணெயும், ஒரு எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு தலா 3 லிட்டர் மண்ணெண்ணெயும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுபோல கிராமப்புறங்களில் உள்ள எரிவாயு இணைப்பு இல்லாத மற்றும் ஒரு எரிவாயு இணைப்பு உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள், மண்ணெண்ணெய் வழங்கு நிலையங்கள் ஆகியவற்றில் மண்ணெண்ணெய் பெற்று பயன் அடையலாம் என்றார் அவர்.