தினமணி 12.05.2010
சொத்துகள் வாங்கும் ஏழைகளுக்கு சலுகை: ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சொத்துகளுக்கு முத்திரைத் தீர்வை–பதிவுக் கட்டணம் விலக்கு
சென்னை, மே 11: ஏழைகளும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களும் ரூ.5 ஆயிரம் வரையிலான சொத்துகளை வாங்கினால் அதற்கான ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அந்தத் துறையின் அமைச்சர் சுரேஷ் ராஜன் (படம்) பதிலளித்து வெளியிட்ட அறிவிப்புகள்:
ஏழை மக்களும் சொந்தமாக சொத்துகள் வாங்குவதை ஊக்குவிக்க ரூ. 3 ஆயிரம் வரை மதிப்புள்ள சொத்துகளுக்கான ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இனி, சொத்துகளின் மதிப்பானது ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இந்தத் தொகை வரையிலான மதிப்புள்ள சொத்துகளுக்கு பதிவு மற்றும் முத்திரைத் தீர்வையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
களப்பணியில் விலக்கு: ஆவணங்களில் சொத்து மாற்றம் செய்யப்படும்போது கட்டடமும் மாற்றப்பட்டால் அதற்கான முத்திரைத் தீர்வையும், பதிவுக் கட்டணமும் செலுத்தப்பட வேண்டும். கட்டடங்கள் மதிப்பிட பதிவு அலுவலர்கள் களப்பணி மேற்கொண்டு மதிப்பீடு செய்கின்றனர். பதிவு செய்யப்பட்ட ஆவணத்தில் கட்டட மதிப்பு ரூ.50 ஆயிரம் வரையிலான கட்டடங்களுக்கு இப்போது களப்பணி செய்யாமலேயே பொது மக்களுக்கு ஆவணம் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வரம்பு 2003-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டு, சுமார் ஏழாண்டுகள் ஆகின்றன. இப்போது கட்டடங்களின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் கிராமப்புறங்களில் ரூ. 1 லட்சம் வரை மதிப்புள்ள கட்டடங்களுக்கும், நகர்ப்புறங்களில் ரூ. 2 லட்சம் வரை மதிப்புள்ள கட்டடங்களுக்கும் களப்பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
மேலும், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம் மற்றும் மதிப்பீடு இணைத்து தாக்கலாகும் ஆவணங்களுக்கும் கட்டட களப்பணி மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதனால், ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு திரும்ப வழங்கப்படும்.
சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தரச்சான்று:
சார்பதிவாளர் அலுவலகங்களின் மதிப்பை பொது மக்கள் மத்தியில் உயர்த்திடும் வகையில் 10 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. 9001:2008 தரச்சான்று பெறப்படும் என்றார் அமைச்சர் சுரேஷ் ராஜன்.