தினமணி 31.08.2010
ஆரணி நகராட்சிக்கு ரூ.5 கோடி திட்டப் பணிகள்: அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்ஆரணி, ஆக.30: ஆரணி நகராட்சிக்கு ரூ.5 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர்மன்றத் தலைவர் சாந்தி லோகநாதன் தலைமை வகித்தார். ஆணையர் சசிகலா, துணைத்தலைவர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆரணியில் கட்டி முடிக்கப்பட்ட எரிவாயு தகன மேடையை திறக்க வேண்டும். காந்திநகர் பகுதியிலுள்ள பூங்காவையும், அங்குள்ள குழந்தைகள் மையத்தையும் சீரமைக்க வேண்டும். நகராட்சித் தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீடுகளில் நீர்க்கசிவை சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.