தினமணி 17.09.2010
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 5 கிராம ஊராட்சிகள் திடீர் நீக்கம்
தூத்துக்குடி, செப். 16: தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 10 ஊராட்சிகளில் 5 ஊராட்சிகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் வெளிநடப்பு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி அவசரக் கூட்டம், மேயர் இரா. கஸ்தூரி தங்கம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ஜே. தொம்மை ஜேசுவடியான், ஆணையர் பெ. குபேந்திரன் முன்னிலை வகித்தனர்.
இக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. இதில், தூத்துக்குடி மாநகராட்சி எல்லையை திருத்தி அமைக்கும் தீர்மானம் முக்கியமானதாகும்.
நகராட்சியாக இருந்த தூத்துக்குடி, மாநகராட்சியாக கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி தரம் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியை ஒட்டியுள்ள மாப்பிளையூரணி, தூத்துக்குடி ரூரல், சங்கரப்பேரி, மீளவிட்டான், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, அய்யனடைப்பு, கோரம்பள்ளம், புதூர் பாண்டியாபுரம் ஆகிய 10 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு, ஏற்கெனவே இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியுடன் 10 கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கான அரசாணை கடந்த 17.3.2010-ல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 10 ஊராட்சிகளில், மாப்பிளையூரணி, கோரம்பள்ளம், முள்ளக்காடு, அய்யனடைப்பு, புதூர் பாண்டியாபுரம் ஆகிய 5 ஊராட்சிகளை நீக்குவது என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மீதமுள்ள சங்கரப்பேரி, தூத்துக்குடி ரூரல், மீளவிட்டான், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி ஆகிய 5 ஊராட்சிகளை மட்டும் மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்காக வியாழக்கிழமை தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை தி.மு.க. உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்தனர். மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரே உறுப்பினரான டி. ராஜா இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளை நீக்கக் கூடாது. பழைய நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்தி மேயரிடம் அவர் மனு கொடுத்தார். தொடர்ந்து கூட்டத்தில் இருந்து அவர் வெளிநடப்பு செய்தார்.
இந்தத் தீர்மானம் குறித்து மேயர் இரா. கஸ்தூரி தங்கம் விளக்கமளித்து பேசியதாவது:
கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை 10 என்பது மிகவும் அதிகமாக உள்ளது.
அதிக கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதால் கிராம பகுதிகளுக்கு கிடைக்கப்பெறும் மத்திய, மாநில அரசின் நிதியுதவி ஆதாரங்கள் அப்
பகுதிகளுக்கு கிடைக்காமல் போகும்.
விவசாய வளர்ச்சிக்குரிய திட்டங்களைச் செயல்படுத்த இயலாமல் போகும், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற ஏழை மக்களுக்கான பல திட்டங்கள் கிடைக்காமல் போகும்.
மேலும், அனைத்து பகுதிகளிலும் நகர்புறத்துக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதி செய்ய போதுமான நிதி ஆதாரம் மாநகராட்சியிடம் இல்லை என்பது போன்ற காரணங்களால் இந்த ஊராட்சிகளை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒரே ஒரு உறுப்பினரான 10-வது வார்டு உறுப்பினர் க. முருகேசன் மட்டும் கலந்து கொண்டார். இவர் ஏற்கெனவே 2 கூட்டங்களில் பங்கேற்காததால்தான் அவர் தற்போது கலந்துகொண்டதாக தெரிகிறது.