தினமலர் 07.10.2010
ரூ.5 கோடி மதிப்பில் கூடுதல் குடிநீர் திட்டம்: கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்
கரூர்: “”மாவட்டத்தில் நடப்பாண்டு 122 குடியிருப்புகளுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் தனி மின்விசை திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றும், அத ற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்,” என்று கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி பேசினார். குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மின் வாரிய அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் கரூரில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: மக்களுக்கு குடிநீர் வழங்குவது முக்கிய பணி. குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மின்வாரியம் இணைந்து செயல்பட வேண்டும். குடிநீர் பிரச்னை என்றால், அதை உடனடியாக சமாளித்து நிரந்தர தீர்வு காண வேண்டும். இற்காகவே ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடக்கிறது. இக்கூட்டம் மாதந்தோறும் நடக்கும்.
மாவட்டத்தில் ஒன்பது கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் 950 குடியிருப்புக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. கிராம திட்ட அமை ப்பு மூலம் கடைகோடி கிராம மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் திட்டம் இருக்க வேண்டும். அதற்காகத்தான் அரசு தனி மின்விசை திட்டத்தை செயல்படுத்தி அதற்கு முன்னுரிமை கொடுத்துள்ளது. கூட்டுகுடிநீர் திட்டத்தில் மின்தடை ஏற்படாமல் அதை உடனடியாக சீர்செய்ய வேண்டும். அரசு நடப்பாண்டில் இம்மாவட்டத்தில் மேலும் 122 குடியிருப்புகளுக்கு தனிமின்விசை திட்டம் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 122 குடியிருப்புகளில் 32ல் பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணி விரைவாக முடிக்க வேண்டும். அதற்கு குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் இணைந்து துரிதமாக ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராஜ்குமார், மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) தண்டபாணி, ஜெயசிங் பாஸ்கரன் மற்றும் பலர் பங்கேற்றனர்..