தினமலர் 20.11.2010
ஊரணி விவகாரம் விஸ்வரூபம் :ரூ.5 கோடி ரோடு திட்டம் கேள்விக்குறி
சிவகாசி: சிவகாசி நகராட்சி கூட்டத்தில் ஊரணி விவகாரம் காரணமாக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. சிவகாசி நகராட்சி கூட்டம் துணைத்தலைவர் அசோகன் தலைமையில், கமிஷனர்(பொறுப்பு) முருகன் முன்னிலையில் நடந்தது. கூட்டம் துவங்கியதும் தி.மு.க., கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், பாண்டி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பாலகுரு, திருமுருகன் ஆகியோர் “ஏழைகள் புறம்போக்கில் குடியிருந்தால் பட்டா வழங்கவிடாமல் வட்டார வரி செலுத்துவோர் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் தடை பெறுகின்றனர். ஆனால் வசதியானவர்கள் இடத்தை ஆக்கிரமித்தால் கண்டுகொள்வது இல்லை. கவுன்சிலர்கள் 10 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிவிட்டு பேசாமல் இருப்பதாக கூறி வருகின்றனர்‘ என்றனர். துணைத்தலைவர்: வெளியில் நடக்கும் பிரச்னைக்கும், கவுன்சில் கூட்டத்தையும் சம்மந்தப்படுத்த கூடாது. ஊரணி குறித்து வருவாய்துறையிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். கூட்டம் முடிந்து பேசலாம். பாலசுப்பிரமணியன், திருமுருகன்: இதே பதிலை நான்கு ஆண்டுகளாக கேட்டதுதான் மிச்சம். பிரச்னைக்கு முடிவு செய்து விட்டு கூட்டம் நடத்துங்கள். துணைத்தலைவர்: கூட்டத்தை ரத்து செய்ய முடியாது. நகரில் 5 கோடியில் ரோடுகள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. நான்கு கவுன்சிலர்களும், “வெளியேறமுடியாது. கூட்டம் எப்படி நடக்கிறது என பார்ப்போம் என ஆவேசமாக மேஜை தட்டி பேசினர். இதையடுத்து கூட்டம், மறு தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே நகராட்சியை முற்றுகையிட போவதாக தகவல் கிடைத்ததால் நகராட்சி முன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டது. சிவகாசி நகராட்சிக்கு சிறப்பு சாலை திட்டத்தில் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. இத் திட்ட வேலை செய்ய 19ம்தேதிக்குள் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப கோரியிருந்தனர். கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் 5 கோடி நிதி சிவகாசிக்கு கிடைக்குமா என கேள்விக்குறியாக உள்ளது.