தினகரன் 30.11.2010
ரூ5 கோடி நிலம்: மாநகராட்சி மீட்புசென்னை, நவ. 30: சேத்துப்பட்டில் தனியார் ஓட்டல் ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தை மாநகராட்சி அதிரடியாக மீட்டது. அந்த இடத்தில் ‘இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்‘ என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டு ஸ்பட்ரங் ரோட்டில் பாலிமர் ஓட்டல் உள்ளது. இதன் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 2,550 சதுர அடி நிலம் உள்ளது. இந்த இடத்தை ஓட்டல் நிர்வாகம் ஆக்கிரமித்து, ஜூஸ் கடை மற்றும் கழிவறை கட்டியிருந்தது.
இந்த இடத்தை மாநகராட்சி மீட்க முயன்றபோது, ஓட்டல் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றது. இந்த தடை உத்தரவு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் 30 பேர், ஜேசிபி இயந்திரத்துடன் அந்த ஓட்டலுக்கு சென்றனர். ஜூஸ் கடை, கழிவறையை இடித்து தள்ளி இடத்தை மீட்டனர். இடிபாடுகள் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டன. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.