மாலை மலர் 30.08.2010
ரூ. 5 கோடியே 70 லட்சம் செலவில் சென்னையில் 7 இடங்களில் லிப்டுடன் நடை மேம்பாலம்; மேயர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
சென்னை, ஆக. 30- சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் தாலுகா ஆபீஸ் சாலையில் சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்படும் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலப் பணியினை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பிறகு அவர் கூறியதாவது:-
துணை முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களின் பயன்பாட்டிற்காக நுங்கம்பாக்கம், ஸ்டர்லிங் சாலையில் ஏற்கனவே ரூ. 70 லட்சம் செலவில் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார்.
பொதுமக்கள் சாலைகளை கடப்பதற்காக நடை மேம்பாலங்கள் மாநகராட்சி மூலம் கட்டப்படுகிறது. முதியவர்கள் பயன்பாட்டிற்காக லிப்டுடன் கூடிய நடைமேம்பாலங்கள் கட்டப்படுகிறது.
சென்னை ராயப்புரம் பீச் ரெயில்வே நிலையம் அருகில் ராஜாஜி சாலையில் ரூ. 70 லட்சத்திலும், எழும்பூர் ரெயில்வே நிலையம் அருகில் காந்தி இர்வீன் சாலையில் ரூ. 90 லட்சத்திலும், பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் ரூ. 80 லட்சத்திலும், அடையார் துர்காபாய் தேஷ்முக் சாலை யில் ரூ. 80 லட்சத்திலும், வாலாஜா சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் ரூ. 80 லட்சத்திலும், வாலாஜா சாலை– காயிதே மில்லத் சாலை சந்திப்பில் ரூ. 80 லட்சத்திலும் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்க திட்டமிட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை தாலுகா ஆபீஸ் சாலையில் ரூ. 90 லட்சம் செலவில் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நடைமேம்பாலப்பணி செப்டம்பர் மாதத்தில் முடிக்கப்படும்.
லிப்ட் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். ஆகமொத்தம் சென்னை மாநகரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 இடங்களில் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் ரூ. 5 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்த ஆய்வில் மன்ற உறுப்பினர் எம். மகேஷ்குமார், மண்டல அலுவலர் என்.எஸ்.பிரேம்நாத் ஆகியோர் உடன் இருந்தனர்.