தினமணி 31.07.2012
தஞ்சை நகராட்சியில் ஆக.5-க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தல்
இதுகுறித்து நகராட்சி ஆணையர் பு. ஜானகிரவீந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தஞ்சாவூர் நகராட்சி எல்லைக்குள்பட்ட சாலைகள், தெருக்கள், சந்துகள் மற்றும் பொது இடங்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக. 5-க்குள் தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத பட்சத்தில் நகராட்சி சிப்பந்திகள், காவல் துறை மற்றும் இதர துறையினருடன் ஒருங்கிணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபடுவர்.
மேலும், ஆக்கிரமிப்பை அகற்ற ஆகும் செலவுத்தொகை முழுவதும் ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து வசூல் செய்வது மட்டுமன்றி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
அண்மையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட ஆபிரஹாம் பண்டிதர் சாலை, மேம்பாலம் கீழுள்ள பகுதி, கீழவாசல் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டால் மிகவும் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.