தினமணி 03.09.2012
தில்லி மாநகராட்சிப் பள்ளிகளில் 5 ஆயிரம் ஆசிரியர் இடங்கள் காலி
புது தில்லி, செப். 2: தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கு உள்பட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களில் மொத்தம் 5,568 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.தில்லி மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியே இயங்கி வருகின்றன. இவற்றின் கீழ் மொத்தம் 1,750 பள்ளிகள் உள்ளன.வடக்கு தில்லி மாநகராட்சியின் கீழ் வரும் பள்ளிகளில் 1,971 இடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அதையடுத்து, கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பள்ளிகளில் 1,958 ஆசிரியர் பணியிடங்களும் தெற்கு தில்லி மாநகராட்சி பள்ளிகளில் 1,639 ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும்.தில்லி மாநகராட்சி பிரிக்கப்படாமல் ஒருங்கிணைந்த நிலையில் இருந்தபோது, 2009-10ம் கல்வியாண்டு முதல் 2011-12-ம் கல்வியாண்டு வரையில் மொத்தம் 3,848 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.தில்லி உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் பணியை “தில்லி சபார்டினேட் சர்வீசஸ் செலெக்ஷன் போர்டு’ மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் ஆசிரியர்களை நியமிக்கும் பணி வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.