தஞ்சை நகராட்சியில் 5 பேர் பணி நியமனம்
தஞ்சை நகராட்சியில் 5 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இதில், கே. விமலுக்கு வருவாய் உதவியாளர் பணியிடமும், ஆர். கனிஷ்கா, ஆர். தரண்யா, சி.எஸ். சசிரேகா ஆகியோருக்கு இளநிலை உதவியாளர் பணியிடமும், பொது சுகாதாரப் பிரிவு ஓட்டுநர் பி. சந்திரனுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டன. இந்த ஆணைகளை நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் வழங்கினார். நகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன், நகர் மன்ற உறுப்பினர் சரவணன், பொறியாளர் சீனிவாசன், நகர் நல அலுவலர் சிவனேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சாவித்திரி தெரிவித்தது:
நகராட்சிகளில் நிர்வாக செலவினம் 49 சதத்துக்கும் அதிகமாக இருந்து வந்ததால், காலிப் பணியிடங்களை நிறைவு செய்ய இயலாமல் இருந்து வந்தது. இதனால், வளர்ச்சி பணிகள், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டது. இந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு நகராட்சிகளின் நிர்வாகச் செலவின உச்ச வரம்பை 64 சதமாக தமிழக முதல்வர் உயர்த்தி அறிவித்தார். இதன்படி, இந்தக் காலிப் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டது என்றார்.