மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தில் 5 ஊராட்சி பகுதிகளை இணைக்க முடிவு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் 5 ஊராட்சிகளையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் 2015ம்ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் ஈரோடு நகராட்சி, வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி, பெரியசேமூர் ஆகிய 4 மூன்றாம் நிலை நகராட்சிகளை ஒருங்கிணைத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய்கள் செல்லும் பகுதிகள் 4 பேக்கேஜ்களாகவும், கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும் கட்டுமான பணிகள் 5வது பேக்கேஜாகவும் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் 3 பேக்கேஜ் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
4வது மண்டலத்திற்குட்பட்ட காசிபாளையம் பகுதியில் 4வது பேக்கேஜ் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்பு கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 4 கோடி ரூபாய் அளவிற்கு வசூலிக்கப்பட்டுள்ளது.
பழைய மாநகராட்சி 45 வார்டுகளில் மட்டுமே இந்த பணிகள் நடந்து வருவதால் புதியதாக இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளையும் இணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக 5 பேக்கேஜ்களாக பணிகள் நடந்து வருகிறது. தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட திண்டல், வில்லரசம்பட்டி, முத்தம்பாளையம், கங்காபுரம், எல்லப்பாளையம் ஆகிய 5 ஊராட்சிகளையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை திட்டத்தில் 5 ஊராட்சிகளையும் இணைத்து பணிகளை செய்ய கூடுதலாக 100 கோடி ரூபாய் செலவாகும். இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. புதியதாக 5 ஊராட்சிகளையும் இணைத்து பணிகளை மேற்கொண்டால் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைய இன்னும் அதிக அளவில் கால அவகாசம் தேவைப்படும்’ என்றார்.