பள்ளிபாளையம் நகராட்சிக்கு 5 டன் குப்பை ஈரோட்டில் இருந்து தினமும் வழங்க முடிவு?
ஈரோடு: பள்ளிபாளையம் நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் உரம் தயாரிக்க, ஈரோடு மாநகராட்சியிடம், நாள்தோறும், 5 டன் குப்பை கழிவுகளை விலைக்கு வாங்கிட கோரியுள்ளது. மன்றத்தின் ஒப்புதல் பெற்றதும் வழங்கப்படும், என துணை மேயர் பழனிச்சாமி தெரிவித்தார்.
ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்ந்தப்பட்ட பின், 109.52 சதுர கி.மீ., பரப்பளவுடன், நான்கு மண்டலங்கள், 60 வார்டுகளுடன் உள்ளன. மாநகராட்சி பகுதியில் இருந்து தினமும், 300 டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.
ஒட்டுமொத்த ஈரோடு நகர் பகுதி, சூரம்பட்டி, காசிபாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர்.
சூரியம்பாளையம், பெரியசேமூர், வீரப்பன்சத்திரம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், வைராபாளையம் சுடுகாட்டினை ஒட்டிய, காவிரி கரையோரம் கொட்டி வருகின்றனர்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழாக, வெண்டிபாளையம் குப்பை கிடங்கில், தினமும், 150 டன் உரங்கள் தயாரிக்கின்றனர். வைராபாளையம் பகுதியில் திடக்கழிவு திட்டத்துக்காக, உள்கட்டமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரம் தயாரிக்கும் பணிக்காக, ஈரோடு மாநகராட்சியிடம் இருந்து, நாள்தோறும், 5 டன் குப்பையை வாங்கி அனுமதி கோரியுள்ளனர்.
இதுபற்றி துணைமேயர் பழனிச்சாமி கூறியதாவது:
பள்ளிபாளையம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் உரம் தயாரித்திட, போதுமானதாக குப்பை கழிவுகள் இல்லை.
இதனால், குப்பைகள் வீணாகி வருகிறது. எனவே, அருகில் உள்ள ஈரோடு மாநகராட்சியிடம், தினமும், 5 டன் குப்பை கழிவுகளை வாங்கி, இரண்டையும் சேர்த்து உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ள, குப்பை கேட்டுள்ளனர்.
பணியாளர் கூலி, குப்பையை வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்படும் செலவுகளை திட்டமிட்டு, மன்றத்தில் ஒப்புதல் பெற்றபின், பள்ளிபாளையம் நகராட்சிக்கு வழங்கப்படும். தவிர, வைராபாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் – 2, விரைவில் செயல்படவுள்ளதால், சேகரிக்கப்படும் கழிவுகள், நமக்கே சரியாக இருக்கும், என்றார்.