மேட்டுப்பாளையம் நகராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு
மேட்டுப்பாளையம் நகராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கென அரசு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
நகராட்சி வளர்ச்சித் திட்டப் பணகள் குறித்து அவர் மேலும் கூறியது: மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ. 5 கோடி நிதியிலிருந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
காரமடை சாலையில் ஹவுசிங் யூனிட் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய நகராட்சி அலுவலக கட்டடத்தில் மேல்தளம் அமைக்க கூடுதல் நிதியாக ரூ. 1 கோடி, நகர ஜவஹர் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிக்கு ரூ. 2.50 கோடி, நகராட்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் கட்ட ரூ.55 லட்சம், திடக் கழிவிலிருந்து உயிரி எரிவாயு மின் திட்டத்திற்கு ரூ. 25 லட்சம் செலவிடப்படும்.
நகராட்சிப் பகுதிகளில் கோடையில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, வறட்சி நிவாரணத் திட்டம் 2013-14 இன் கீழ் வார்டு எண் 3, 4, 10, 12, 13, 14, 15, 16, 22, 32 ஆகிய 10 வார்டுகளில் மின் மோட்டார் வசதியுடன் புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க ரூ. 1.25 லட்சமும், வார்டு எண் 2, 17, 31, 32 வார்டுகளில் ஏற்கனவே உள்ள 5 ஆழ்குழாய் கிணறுகளை சுத்தப்படுத்தி மின் மோட்டார் வைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தும் பணிக்கு ரூ. 5 லட்சமும் செலவிடப்படும் என்று தெரிவித்தார்.
புதிய திட்டப் பணிகளுக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், அதற்கு பரிந்துரை செய்த உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும், தொகுதி எம்எல்ஏ ஓ,கே. சின்னராஜ் உள்ளிட்டோருக்கும் நகராட்சி சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.