தினத்தந்தி 04.10.2013
சேலம் தோப்புக்காட்டில் ரூ.5 கோடி மதிப்பிலான ஒடை ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சேலம் தோப்புக்காட்டில் ரூ.5 கோடி மதிப்பிலான ஓடை ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர்.
ஓடை பகுதியில் ஆக்கிரமிப்பு
ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து மழை நீர்
சாரதா கல்லூரியை ஒட்டி உள்ள ஓடை வழியாக பள்ளப்பட்டி ஏரியிலும், திருமணி
முத்தாற்றிலும் கலக்கிறது. ஆனால் ஓடையில் பல இடங்களில் அடைப்பு மற்றும்
ஆக்கிரமிப்புகள் இருந்ததால் மழை நீர் அருகில் உள்ள வீடுகளுக்கு புகுந்தது.
சமீபத்தில் ஏற்காட்டில் பெய்த பலத்த
மழையின் போது மழைநீர் கரைப்புரண்டு வந்தது. அப்போது ஓடை பகுதியில் ஏற்பட்ட
அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு காரணங்களால் தோப்புக்காடு பகுதியில்
வசிக்கும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரிதும்
அவதியுற்றனர்.
வீட்டுமனைகளாக
இதையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் அசோகன்,
தோப்புக்காடு பகுதியில் உள்ள கிளை ஒடையை தூர்வாரி ஆழப்படுத்தி தங்கு
தடையின்றி மழை நீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க பொறியாளர்களுக்கு
உத்தரவிட்டார். இதையடுத்து, தூர்வாரும் பணியில் ஈடுபடும் போது, அந்த
பகுதியில் இரண்டாக பிரிந்து செல்லும் ஓடையில், ஒரு கால்வாய் முற்றிலும்
ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனையாக மாற்றப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.
இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர்
பொறியாளர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து நிலத்தை அளவீடு செய்து அறிக்கை
தாக்க செய்ய உத்தரவிட்டார். அந்த குழுவினர் நிலத்தை அளவீடு செய்யும் போது,
60 அடி அகலமும், 341 அடி நீளமும் கொண்ட ஓடை முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு,
மண்ணால் மூடப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்து உறுதி
செய்யப்பட்டது.
ரூ.5 கோடி மதிப்பில்
இதையடுத்து ரூ.5 கோடி மதிப்பிலான ஓடை
ஆக்கிரமிப்பு நிலம் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து
போர்க்கால அடிப்படையில் அந்த பகுதியில், ஓடை பகுதியில் உள்ள மண்
அகற்றப்பட்டு மாநகராட்சி மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர்
கட்டுவதற்கும், வாய்க்காளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த பணிகளை மேயர் சவுண்டப்பன், ஆணையாளர் அசோகன், துணை மேயர் நடேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.