தினமலர் 15.10.2013
அனுமதியின்றி செயல்பட்ட தொழிற்சாலையில் சோதனை : 5 டன் பாலிதீன் கேரி பேக் பறிமுதல்
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் எவ்வித உரிமமும் பெறாமல் செயல்பட்ட, பிளாஸ்டிக் கேரி பேக் தொழிற்சாலையில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, விற்பனைக்கு அனுப்ப வைத்திருந்த, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான,40 மைக்ரானுக்கு உட்பட்ட ஐந்து டன் பாலிதீன் கேரி பேக் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, 40 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் முற்றிலும் ஒழிக்க அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, கமிஷனர் செல்வராஜ் உத்தரவுப்படி, நகர் நல அலுவலர் செல்வக்குமார், உதவி கமிஷனர் கண்ணன், ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு, 35வது வார்டு பகுதியில் திடீர் ஆய்வு நடத்தியது.
விஜயாபுரத்தை அடுத்துள்ள புதுப்பாளையம் குருவாயூரப்பன் நகர் பகுதியில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கட்டப்பட்டிருந்த பெரிய கட்டடத்தில், “மருதர் பாலிமெர்ஸ்’ என்ற பெயரில், பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. “நாப்தா’ என்ற பாலிதீன் கவர் தயாரிப்புக்கான மூலப்பொருள், “பாலிதீன்’ ரோல் தயாரிக்கும் மெஷின், பாலிதீன் ரோலில் இருந்து, பாலிதீன் கவர்களை வடிவமைக்கும் இரண்டு மெஷின்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.
இங்கு, மாநகராட்சியில் எவ்வித உரிமமும் பெறாமல், 40 மைக்ரானுக்கும் குறைவான பாலிதீன் கவர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆய்வு நடத்திய அதிகாரிகள், விற்பனைக்கு அனுப்ப வைத்திருந்த, ஐந்து டன் பாலிதீன் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர்.
நகர்நல அலுவலர் செல்வக்குமார் கூறியதாவது:
வணிக வரித்துறையில் மட்டும், பர்பத்சிங் என்ற பெயரில் உரிமம் பெறப்பட்டு, பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது. விதிமுறைக்கு மாறாக, 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 19 மைக்ரான் அளவில், ஏழு விதமான அளவுகளில் பாலிதீன் கவர் தயாரிக்கப்படுகிறது.
அவற்றில், சந்தேகத்துக்கு இடமளிக்கும் நான்கு வகையான சாம்பிள் சேகரிக்கப்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பயன்படுத்தும் மெஷின்கள் குறித்த விவரங்கள், மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு தெரியப்படுத்தி, மேல்நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.
மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிமம் பெறாமல் இயங்குவதாலும், தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்களை உற்பத்தி செய்ததாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி வக்கீலிடம் ஆலோசனை பெறப்படும். 1.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐந்து டன் பிளாஸ்டிக் கேரி பேக் பறிமுதல் செய்யப்பட்டு, மண்டல அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கை உறுதி செய்யப்பட்டதும், பிளாஸ்டிக் ரோடு அமைக்க பயன்படுத்தப்படும். சம்பந்தப்பட்டவர்களுக்கு, கோர்ட் மூலமாக தண்டனை பெற்றுத்தரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.