மாலை மலர் 15.07.2009
சென்னை மக்கள் தொகை 50 லட்சத்தை தாண்டியது: மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜூலை. 14-
சென்னை மாநகராட்சி குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி மாநகராட்சியில் நடந்த விழாவுக்கு கமிஷனர் ராஜேஷ் லக்கானி தலைமை தாங்கினார். சுகாதாரத் துறை துணை கமிஷனர் ஜோதிநிர்மலா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
1987-ம் ஆண்டு உலக மக்கள் தொகை 500 கோடியை தாண்டியது. இதனால் ஏற்படும் அபாயத்தை உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஜூலை 11-ந் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தனர்.
2009-ம்ஆண்டின்கணக் குப்படி உலக மக்கள் தொகை 676 கோடி. இதில் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தி யாவின் மக்கள் தொகை 115.6 கோடியாக உள்ளது. தமிழ் நாட்டின் மக்கள் தொகை 6.65 கோடியாகும்.
அதில் சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் தொகை 50.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
1996 முதல் 2001 வரை குடும்ப நலத்துறை மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளுக்காக அப்போது மேயராக இருந்த துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அரசு விருது வழங்கியது. இப்போதும் அவரது ஆலோசனைப்படி மாநகராட்சியின் குடும்ப நலத்துறை சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பிறந்து 24 மணி நேரத்தில் பிறப்பு சான்றிதழ் வழங் கப்பட்டு வருகிறது. மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.168 மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பிறந்த அன்றே வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவ மனைகளுக்கு இணையாக மாநகராட்சி மருத்துவ மனைகள் தரம் உயர்த்தப்பட்டதால் பிரசவத்திற்கு அதிக அளவில் தாய்மார்கள் வருகிறார்கள். ஆண்டுக்கு 14 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன.
மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினால் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல்– அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன்-3ந் தேதி முதல் பிறந்து தமிழில் பெயர் சூட்டப்பட்ட 250 குழந்தைகளுக்கு வருகிற 23-ந்தேதி துணை முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்க மோதிரம் வழங்குகிறார்.
தொடர்ந்து இந்த திட்டம் ஒவ்வொரு மண்டல அளவிலும் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். மாநகராட்சி பணியாளர்களுக்கு இலவச ரத்த பரிசோதனையும் நடந்தது.
விழாவில் துணை மேயர் சத்யபாமா, எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, நிலைக்குழு தலைவர் மணிவேலன், மாவட்ட குடும்ப நல அதிகாரி டாக்டர் சாருமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.