தினமணி 18.01.2010
50 ஆண்டுகளாக வசித்துவரும் குடிசைவாசிகளை காலி செய்யும் திட்டத்தை கைவிடுமா மாநகராட்சி?
பெங்களூர், ஜன.16: 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் குடிசைவாசிகளை காலி செய்ய முயற்சிக்கிறது பெங்களூர் மாநகராட்சி.
÷பெங்களூர் ஓகலிபுரம் 2-வது கிராஸில் உள்ளது லட்சுமண்ராவ் நகர். இங்கு 33 குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளாக குடிசை போட்டு வசித்து வருகிறார்கள். இவர்கள் நீண்ட காலம் அப்பகுதியிலேயே வசித்து வருவதால் 1994-ம் ஆண்டு கர்நாடக அரசு அந்த குடிசைப்பகுதியை அங்கீகரித்தது. இதையடுத்து அரசின் வீட்டுவசதித் திட்டமான “ஆஷ்ரயா’ திடத்தின் கீழ் குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக் கொள்ள அனுமதி அளித்து, பட்டா போட்டுக் கொடுத்தது.
÷1994-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இந்த பட்டா வழங்கப்பட்டது. தாங்கள் குடியிருக்கும் பகுதியை அரசு தங்களுக்கே வழங்கிவிட்டதை அறிந்த மகிழ்ந்த மக்கள் பிரியதர்ஷினி மகிளா மிலன் என்ற சங்கத்தை ஏற்படுத்தி அதன்மூலம் கடன் வாங்கி வீடு கட்ட முயற்சி எடுத்தனர்.
÷அவர்களது முயற்சிக்குப் பலன் கிடைத்தது. பெங்களூர் மாநகராட்சி வீடு கட்ட வரைவுத் திட்டத்துக்கு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து இப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கு முறையாக வரியும் கட்டி வருகிறார்கள்.
÷இதைத்தொடர்ந்து பெங்களூர் மாவட்ட மகிளா மிலன் என்ற கூட்டுறவு சங்கம் மூலம் இவர்களது சங்கத்துக்கு ரூ.12.5 லட்சம் கடன் கிடைத்தது.
இந்த கடன் மூலம் 26 குடும்பத்தினர் வீடுகளை கட்டி முடித்துள்ளனர். தரைத்தளமும், முதல் மாடியும் கான்கிரீட்டால் கட்டி முடித்துள்ளனர். மற்றவர்கள் கட்டுமானப் பணியைத் துவங்கியுள்ளனர். மொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வருகிறார்கள். கூட்டுறவுச் சங்கத்தில் வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்தி வருகிறார்கள்.
÷இந்நிலையில் திடீரென மாநகராட்சியில் இருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸ் இங்கு குடியிருப்போருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. அந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என்றும் ஒரு வாரத்தில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தங்களுக்கு அந்த இடம் பட்டா போட்டு கொடுக்கப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் மாநகராட்சி அதிகாரிகளிடம் காட்டியும் அதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. வீடுகளை இடிப்பது என்ற முடிவில் மாற்றம் இல்லை என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டனர்.
÷இதையடுத்து மாநகராட்சி ஆணையர் பரத்லால் மீனா மற்றும் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் இந்த ஏழை மக்களுக்கு உதவ யாரும் முன்வரல்லை.
இதற்கிடையே வீடுகளை இடிக்கும் மாநகராட்சியின் முடிவுக்கு தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் குடிசைவாசிகள் சங்கம் சார்பில் பொதுநலன் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் குடிசைவாசிகளுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.
இதையடுத்து குடிசைவாசிகள் சார்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.
÷இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி மாநகராட்சியிடமிருந்து மீண்டும் நோட்டீஸ் வந்தது. அதில் குடிசைவாசிகள் கட்டியிருக்கும் வீடுகள் இடித்துத் தள்ளப்படும் என மீண்டும் எச்சரித்து காலி செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
யாரும் உதவிக்கு வராத நிலையில் வங்கியில் வாங்கிய கடன் இன்னும் கட்டி முடிக்கப்படாத நிலையில் வீடுகளை இடிக்கும் மாநகராட்சியின் முடிவால் குடிசைவாசிகள் அச்சத்தில் உள்ளனர். நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற போராடி வருகிறார்கள்.
÷இதற்கிடையே குடிசைவாசி வீடுகளை இடிக்க முயற்சிக்கும் மாநகராட்சியின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை அங்கு வசிக்கும் குடிசைவாசிகள் அனைவரும் ராமச்சந்திரபுரம் 2-வது முக்கியச்சாலையில உள்ள காந்தி சிலை முன் தர்னா மேற்கொண்டனர்.
÷இதற்கிடையே லட்சுமண்ராவ் நகர் குடிசைப் பகுதியை காலி செய்துவிட்டு அங்கு பிரசவ மருத்துவமனை கட்ட மாநகராட்சித் திட்டமிட்டிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
÷இதுகுறித்து அப்பகுதியில் குடியிருக்கும் பிரபாகர் என்பவர் கூறுகையில், கடந்த 50 ஆண்டுகளாக இங்கு குடியிருந்து வருகிறோம். நான் பிறந்ததே இந்தக் குடிசையில் தான். பட்டா கொடுத்து அங்கீகரித்த மாநகராட்சியே இப்போது காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே போவது? எனவே மாநகராட்சி தனது முடிவை கைவிட வேண்டும் என்றார்.