மாலைமலர் 31.12.2009
50 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு வார்டு: சென்னை மாநகராட்சி வார்டுகள் 175 ஆக உயருகிறது ; எல்லை விரிவாக்க பணிகள் தொடக்கம்

தற்போது சென்னை மாநகராட்சியின் நிலபரப்பு 174 சதுர கிலோமீட்டர். இனி 425 சதுர கிலோ மீட்டராக உயரும். மக்கள் தொகையும் 43 லட்சத்தில் இருந்து 56 லட்சமாக உயருகிறது.
மாநகராட்சி விரிவு படுத்தப்படுவதால் வார்டுகள் எண்ணிக்கையும் உயரும். தற்போது 155 வார்டுகள் உள்ளன. மாபெரும் சென்னையாக மாறும்போது 50 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு வார்டு என்று பிரிக்கப்படுகிறது. இதனால் வார்டுகளின் எண்ணிக்கை 175 ஆக உயரும் என்று தெரிகிறது.
அரசின் உத்தரவு இன்று மாநகராட்சி கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மாநகராட்சியில் இணைக்கப்பட உள்ள பகுதிகளுக்கான வார்டு எல்லைகள் நிர்ணயித்தல், மண்டலங்களை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி கமிஷனர் மேற்கொள்வார். சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்து கொள்ளவும் கமிஷனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உடனடியாக விரிவாக்க பணிகள் தொடங்க உள்ளது.இணைக்கப்பட உள்ள பகுதிகளில் எவ்வளவு பள்ளிகள் எங்கெங்கு அமைந்துள்ளன. சொத்து வரி எவ்வளவு வசூலிக்கப்படுகிறது. மருத்துவமனைகள் எவ்வளவு உள்ளன. புது மருத்துவமனைகள் எங்கெங்கு அமைக்கப்பட்ட வேண்டும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் அதிகாரிகள் பணி மூப்பு உள்பட பல்வேறு விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.