தினமலர் 28.05.2010
வளம்‘ சார்பில் ரூ.50 லட்சத்தில் ரோடு விரிவாக்கம்
திருப்பூர் : “வளம்‘ அமைப்பு சார்பில், திருப்பூர் தெற்கு உழவர் சந்தை முதல் ஏ.பி.டி., ரோடு வரை ரோடு விரிவாக்க பணிகள் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், “வளம்‘ அமைப்பு சார்பில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. குறுகிய ரோடுகளை விரிவாக்கம் செய்தல், புதிய பாலம் அமைத்தல், பாலத்தை அகலப்படுத்துதல் என, பல பணிகளை நிறைவேற்றி வருகிறது.
பல்லடம் ரோட்டில் வரும் வாகனங்கள், நகருக்குள் செல்லாமல், நடராஜா தியேட்டர் ரோடு மற்றும் மங்கலம் ரோடுகளை சென்றடையும் வகையில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் நடக்கின்றன. உழவர் சந்தை அருகே இருந்த பாலம் அகலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், உழவர் சந்தை பாலம் முதல் ஏ.பி.டி., ரோடு வரை, 30 அடி அகலத்துக்கு ரோடு அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, மயானத்தின் சுவர் புதிதாக அமைக்கப்பட்டது. இதனால், கனரக வாகனங்கள் நகருக்குள் நுழையாமல், புறநகர் பகுதிகளுக்கு சென்று வர வழித்தடம் அமைந்துள்ளது.
குறிப்பாக, ஏ.பி.டி., ரோடு பள்ளத்தில் தடுப்புச்சுவர் அமைத்து, ரோட்டை அகலப்படுத்துவ தோடு, சுவரால் மறைக்கப்பட்ட கருவம்பாளையம் செல்லும் வழித்தடத்துக்கு சிறு பாலம் அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன.இப்பணி நிறைவடையும் போது, பழைய பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி அலுவலகம், ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் ரோடு பகுதிகளில் நெரிசல் கணிசமாக குறையும்.
பன்றிகளால் அவதி: வளம் அமைப்பினர் செய்து வரும் அத்தியாவசிய பணிகள் அனைத்தும், பன்றிக்கூட்டத்தால் பாழடைந்து விடுகிறது. ஏ.பி.டி., ரோடு ஜம்மனை பள்ளம், இரு மாதங்களுக்கு முன் தூர்வாரி சுத்தப்படுத்தப்பட்டது. அங்கு பன்றிகள் கூட்டம் கூட்டமாக திரிவதால், கழிவுநீர் தேங்கி சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்களை அமைக்க வலியுறுத்தும் மாநகராட்சி நிர்வாகம், மாநகர பகுதியில் பன்றி வளர்க்க தடை விதிக்க வேண்டும்.