தினமணி 25.09.2009
ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான கலப்பட டீ, பான்பராக் பறிமுதல்
திருச்சி, செப். 24: திருச்சி மாநகரில் ரூ. 50,000 மதிப்பிலான கலப்படம் செய்யப்பட்ட டீ தூள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட பான்பராக் போன்ற பொருள்களை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் கே.சி. சேரன் தலைமையிலான 15 பேர் குழுவினர், சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் வியாழக்கிழமை பகலில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வின் போது முத்திரை இல்லாமலும், கலப்படம் செய்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 25 கிலோ டீ தூள், பள்ளி– கல்லூரிகளுக்கு அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பான்பராக் மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்கள் ஆகியவற்றை இக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க டீ தூள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பகுதிகளிலும் இதேபோன்ற நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், கலப்படப் பொருள்கள், சுகாதாரமற்ற பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.