தினமணி 24.07.2013
மதுரையில் 50 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் அகற்றப்படும்
கட்டடங்கள் பற்றிய ஆய்வு நடைபெற்று வருவதாகவும், இந்தக் கட்டடங்களை இடித்து
அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையர் ஆர்.நந்தகோபால்
தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
கோவில் மாநகரான மதுரை பழமையான மாநகரங்களில் ஒன்றாகும். அருள்மிகு
மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலைச் சுற்றி மதுரை மாநகரம்
உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு கோவிலைச் சுற்றிலும் அமைந்திருந்த மாநகரம்
தற்போது பலமடங்கு விரிவடைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகள்,
வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.
அதேசமயம், மதுரை மாநகரின் முந்தைய பகுதியான மீனாட்சியம்மன் கோவிலைச்
சுற்றிலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்கள் ஏராளமாக
இருக்கின்றன. இவற்றில் பல கட்டடங்களில் அப்போதைய முறைப்படி ஸ்திரத்தன்மை
இல்லாத வகையில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுபோன்ற
கட்டடங்களால் அருகிலுள்ள மற்ற கட்டடங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு விடக்
கூடாது என்பதில் மாநகராட்சி உறுதியாக இருக்கிறது.
கோவை போன்ற சில மாநகரங்களைப் போன்று பழுதடைந்த கட்டடங்கள் இடிந்து
விழுந்து விபத்துகள் ஏற்பட்டதைப் போன்ற துயரச் சம்பவங்கள் மதுரை மாநகரில்
நடந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதற்காக, நகரமைப்பு
பிரிவினர் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுப் பகுதி உள்ளிட்ட முந்தைய
மாநகரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் 50 ஆண்டுகளைக் கடந்து
நிற்கும் கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவற்றில், நூறு ஆண்டுகளைக் கடந்தும் உறுதியாக நிற்கும் மீனாட்சி அம்மன்
கோவில், திருமலை நாயக்கர் மகால் போன்ற பல நூறு கட்டடங்களும் இருக்கின்றன.
இந்தக் கட்டடங்கள் தவிர்த்து, பழுதடைந்த கட்டடங்கள் பட்டியல் தனியாக
தயாரிக்கப்பட்டு வருகிறது. சப்பாணி கோவில் தெரு உள்ளிட்ட முக்கியப்
பகுதிகளில் இதுவரை 50 கட்டடங்கள் பழுதடைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன.
தொடர்ந்து கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்புப் பணி
முடிந்தவுடன், பழுதடைந்த கட்டட உரிமையாளர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து
நோட்டீஸ் கொடுக்கப்படும். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் உரிமையாளர்கள்
பழுதடைந்த கட்டடங்களை அப்புறப்படுத்தாத பட்சத்தில், மாநகராட்சி மூலம் அந்த
கட்டடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்படும். இதற்கான செலவுத் தொகை
சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் வசூல் செய்யப்படும். ஏற்கெனவே,
மாநகராட்சிப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள
ஆக்கிரமிப்பாளர்களுக்கு காலக் கெடு வழங்கப்பட்டது. சிலர் தவிர்த்து
பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருக்கின்றன.
குறிப்பாக, பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள மேலவாசல்,
சுப்பிரமணியபுரம் பாலத்துக்குக் கீழ் ஏராளமான ஆக்கிரமிப்பு மரக் கடைகளும்,
இரும்புக் கடைகளும் அப்படியே இருக்கின்றன. ஆக்கிரமிப்புகள் தயவு தாட்சண்யம்
இன்றி விரைவில் அகற்றப்படும் என்றார். பேட்டியின்போது, நகரப் பொறியாளர்
(பொறுப்பு) அ.மதுரம், முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், உதவி
நகரமைப்பு அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.