தினமணி 9.11.2009
ரூ.50 லட்சம் செலவில் பாலம் கட்ட திட்டம்
திருப்பூர், நவ.8: மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க திருப்பூர்–கருவம்பாளையம் சுற்றுச்சாலையில் ரூ.50 லட்சம் மதிப்பில் பாலம் கட்ட “வளம் அமைப்பு‘ திட்டமிட்டுள்ளது.
திருப்பூரின் மேம்பாட்டுக்காக தொழில்துறையினர் மற்றும் பொதுநல ஆர்வலர்களால் கடந்த 2003-ல் வளம் அமைப்பு துவக்கப்பட்டது. இந்த அமைப்பு பல கோடி செலவில் திருப்பூர் நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலமும், காங்கயம் சாலையில் பாலமும் கட்டிக் கொடுத்துள்ளது. இதன் மூலம் நகரில் 50 சதவீத போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது.
மேலும் தெற்கு ரோட்டரியுடன் இணைந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் நவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய பிணவறையும் அமைத்துள்ளது.
இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்து வரும் வளம் அமைப்பின் 6-ம் ஆண்டு துவக்க விழா வேலாயுதசாமி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. மேயர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார்.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்க உரையாற்றினார்.
இது குறித்து வளம் அமைப்புத் தலைவர் என்.கிரு ஷ்ணசாமி கூறுகையில், “திருப்பூரில் தொழில்துறை யினர் கூட்டுமுயற்சியில் செயல்பட்டு வரும் வளம் அமைப்பின் 6-ம் ஆண்டு துவக்கவிழாவையொட்டி திருப்பூர்–பல்லடம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை வழியே கருவம்பாளையம் செல்லும் சுற்றுச்சாலை யில் ரூ.50 லட்சம் மதிப்பில் பாலமும், கருவம் பாளையம் மயான பகுதியில் சாலை விரிவுபடுத்தி தடுப்புச்சுவர்களும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது‘ என்றார்.
சண்முகவேல் மில்ஸ் குரூப் தலைவர் பி.எஸ்.வேலுச்சாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏசக்திவேல், தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவர் ஏ.பி.அப்புக்குட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.