தினமலர் 09.04.2010
அண்ணா சாலையில் ரூ. 500 கோடியில் ஆறு மேம்பாலங்கள்
சென்னை:அண்ணா சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அங்கு 500 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள ஆறு மேம்பாலங்களுக்கான திட்டங்களுக்கு விரிவான தொழில்நுட்ப அறிக்கை (டி.பி.ஆர்.,) தயார் செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் அமைக்க மாநில நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், சாந்தி தியேட் டர் சிக்னல், எல்.ஐ.சி., சிக்னல், ஸ்பென்சர் சிக்னல், தேனாம் பேட்டை எல்டாம்ஸ் சாலை, நந்தனம் தேவர் சிலை சிக்னல், சி.ஐ.டி., நகர் உள்ளிட்ட ஆறு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
மொத்தம் 500 கோடி ரூபாய் மதிப்பில், இந்த மேம்பாலங்கள் அமையவுள்ளன. இதற்கான, விரிவான தொழில்நுட்ப அறிக்கை தயார் செய்யும் பணி துரிதமாக நடந்து வருகிறது.ஆறு மாதத்தில் இந்தப்பணி முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவக்கப்படவுள்ளன.இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அண்ணா சாலையில் ஆறு மேம்பாலங்கள் அமைந்தால் வாகனங்கள், தாம்பரத்திலிருந்து அண்ணா சாலைக்கு நெரிசலில் சிக்காமல் எளிதாக சென்றுவிட முடியும்.
மாதவரம் – செங்குன்றம், திருவள்ளூர் – செங்குன்றம் சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. உள்வட்ட சாலையில் எட்டு சுரங்கப்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது‘ என்றனர்.