தினகரன் 09.06.2010
நகராட்சிகளில் 500 கி.மீ கான்கிரீட் ரோடு அரசு உத்தரவு
கோவை, ஜூன் 9:நகராட்சிகளில் 500 கி.மீ தூரத்திற்கு மெட்டல் ரோடுகளை கான்கிரீட் ரோடாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்ட அரசாணையில், ” தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2009& 10ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 500 கி.மீ தூரம் கான்கிரீட் ரோடு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நகராட்சிகளில் உள்ள 500 கி.மீ தூரம் உள்ள மெட்டல் ரோடு, 59.52 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் ரோடாக மாற்றப்படும். முதல்கட்டமாக 60 கி.மீ தூரம் கான்கிரீட் அமைக்க 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் படி பணிகள் படிப் பாக துவக்கப்படும். இந்த திட்ட பணிகளுக்கு மாநில திட்ட குழு மற்றும் நிதிக்குழு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2006&07ம் ஆண்டில் 2 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு மெட்டல் ரோடு, கான்கிரீட் ரோடாக மாற்றப்பட்டது, ” என தெரிவித்துள்ளார்.
நகராட்சி முதன்மை செயலர் வெளிட்ட மற்றொரு உத்தரவில், ” ஜப்பான் வங்கி நிதியுதவி மூலம் தமிழக நகர்ப்பகுதி உள்கட்டமைப்பு திட்டத்தில், நகராட்சி மற்றும் பேரூராட்சி கட்டுமானங்கள் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 10.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.