தினமலர் 04.03.2011
ரூ.500க்கு “மாஸ்டர் ஹெல்த் செக்கப்’:மாநகராட்சி, “பலே’ திட்டம்
சென்னை: சென்னை மாநகராட்சி பகுப்பாய்வு கூடங்களில், 500 ரூபாய் கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. நடுத்தர மக்கள் பயன் பெறும் வகையில், 500 ரூபாய் சலுகை கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் என்று மேயர் சுப்ரமணியன் பட்ஜெட்டில் அறிவித்தார். அதன்படி, சைதாப்பேட்டை, திருவான்மியூர், வள்ளூவர் கோடட்ம், பெரம்பூர், மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் ஆகிய ஐந்து இடங்களில் உள்ள பகுப்பாய்வு கூடங்களில் முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டது. சைதாப்பேட்டை பகுப்பாய்வு கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில், திட்டத்தை துவக்கி வைத்து மேயர் சுப்ரமணியன் பேசியதாவது: முழு உடல் பரிசோதனை திட்டத்தில், பல வகையான ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், இ.சி.ஜி., எக்ஸ் ரே, கல்லீரல் பரிசோதனை, மஞ்சள் காமாலை பரிசோதனை உள்ளிட்ட 19 வகையான பரிசோதனைகள் செய்யப்படும். இந்த பரிசோதனைகளை தனியார் மருத்துவமனையில் செய்தால் 4,000 ரூபாய் வரை செலவாகும். ஆனால், மாநகராட்சியின் பகுப்பாய்வு கூடங்களில் 500 ரூபாயில், அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படும். இவ்வாறு மேயர் பேசினார். நிகழ்ச்சியில், தமிழ் பெயர் சூட்டிய 1000 குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் வகையில் சைதாப்பேட்டையில், 50 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை மேயர் வழங்கினார். சாலை ஓரங்களில் துப்புரவு பணி செய்யும் இரண்டு மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களையும் மண்டல அலுவலகங்களுக்கு மேயர் வழங்கினார்.