தினமலர் 11.08.2010
வீடுகளுக்கு; ரூ. 5,000 டிபாஸிட் வசூல் : சூரம்பட்டி, பெரியசேமூரில் பாதாள சாக்கடை பணி.
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதி மற்றும் சுற்றுப்பகுதி நகராட்சிகளை இணைத்து செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், சூரம்பட்டி, பெரியசேமூர் நகராட்சி பகுதிகளில் தீவிரமாக நடக்கிறது. வீடுகளுக்கு குறைந்தது 5,000 ரூபாய் டெபாஸில் வசூலிக்கப்படுகிறது. ஈரோடு மாநகராட்சியுடன், காசிபாளையம், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், பெரிய சேமூர் ஆகிய நான்கு மூன்றாம் நிலை நகராட்சிகளும் இணைக்கப்படுகிறது. முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட மாநகராட்சி 2011 முதல் செயல்பட உள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட மாநகராட்சி குறித்த வார்டுகள் பிரிக்கப்பட்டு, அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 2009-2010ம் நிதியாண்டுக்கான பணிகளில் நான்கு நகராட்சி பகுதிகளையும் இணைத்து, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இப்பணி 209.22 கோடி ரூபாய் செல்வில் ஜெர்மன் நிதி ஆதாரத்துடனும், மக்கள் பங்களிப்புடனும் செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக பாதாள சாக்கடைக்கான பணிகள் பெரியசேமூர், சூரம்பட்டி நகராட்சி பகுதிகளில் துவக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் நான்கு மூன்றாம் நிலை நகராட்சி நிர்வாகங்களிடமும் மக்கள் பங்களிப்பு தொகையை வசூலித்து வழங்க உத்தரவிட்டுள்ளது. சூரம்பட்டி நகராட்சி வார்டுகளில் சேரும் குப்பையை மாநகராட்சி கிடங்கில் கொட்ட, மாநகராட்சி நிர்வாம் அனுமதி வழங்கவில்லை. குப்பை கொட்ட அனுமதி வழங்கினால் மட்டுமே, பாதாள சாக்கடை திட்டத்துக்கு மக்கள் பங்களிப்பை வசூலிப்போம் என, சூரம்பட்டி நகராட்சி நிர்வாகம் கூறிவிட்டது. ஜூலை 1ம் தேதி முதல், வெண்டிபாளையத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் குப்பை கொட்ட சூரம்பட்டி நகராட்சி நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து, சூரம்பட்டி நகராட்சி வார்டுகளில் பாதாள சாக்கடைக்கான குழிகள் தோண்டும் பணி தீவிரமாக நடக்கிறது. மக்கள் பங்களிப்பை வசூலிக்கும் பணியிலும் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சூரம்பட்டி நகராட்சி செயல் அலுவலர் மேரியம்மாள் கூறியதாவது: மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை திட்டப்பணி துவங்கியுள்ளது. எங்களிடம் பங்களிப்பு தொகை மட்டும் வசூலிக்க கூறியுள்ளது. இதன்படி, குடியிருப்புகளுக்கு 500 சதுர அடி வரை டெபாஸிட் தொகை 5,000 ரூபாய், 500 முதல் 1,200 ச.அடி வரை 7,000 ரூபாய், 1,200 முதல் 2,400 வரை 9,000 ரூபாய், 2,400க்கு மேல் 15 ஆயிரம் ரூபாய் டெபாஸிட் தொகை செலுத்த வேண்டும். திட்டம் செயல்படுத்தும் போது, வீடுகளிடம் மாதாந்திர வாடகையாக 500 சதுர அடிக்குள் 70 ரூபாய், 1,200 வரை 100 ரூபாய், 1,200 முதல் 2,400 வரை 150 ரூபாய், 2,400க்கு மேல் 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். வணிக நிறுவனங்களுக்கு 500 சதுர அடி வரை 10 ஆயிரம் ரூபாய், 500 முதல் 1,200 சதுர அடி வரை 21 ஆயிரம் ரூபாய், 1,200 முதல் 2,400 சதுர அடி வரை 27 ஆயிரம் ரூபாய், 2,400க்கு மேல் 75 ஆயிரம் ரூபாய் டெபாஸிட் செலுத்த வேண்டும். சிறப்பு இணைப்புக்கு 90 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். மாதாந்திர வாடகை 500 சதுர அடி வரை 140 ரூபாய், 1,200 வரை 300 ரூபாய், 1,200 முதல் 2,400 வரை 450 ரூபாய், 2,400க்கு மேல் 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். சிறப்பு இணைப்புக்கு 1,250 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.