தினமணி 05.09.2013
தினமணி 05.09.2013
5,000 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இதுவரை 5,000 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் செயல்பட்டு வரும் சர்வதேச கால்நடை சேவை
அமைப்பு சார்பில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கள் மற்றும்
வீட்டு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இம்
மாதத்துக்குள் நாடு முழுவதும் 50 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போட இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக லண்டனில் இருந்து 20 மருத்துவர்கள்
வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மதுரை, ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் வெறி நோய் தடுப்பூசி
போடப்படுகிறது. ஈரோடு மாநகராட்சியில் 5 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போட
இலக்கு நிரண்யிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி திங்கள்கிழமை முதல் இம்முகாம்
நடைபெற்று வருகிறது.
மாநகராட்சிக்கு உள்பட்ட 1-வது, 16-வது வார்டுகளில் தடுப்பூசி போடும் பணி
நடைபெற்றது. ஈரோடு கங்காபுரம் பகுதியில் 70 நாய்களுக்கும், காந்தி நகர்
பகுதியில் 102 நாய்களுக்கும் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி போடப்பட்டது.
மாநகராட்சி 46-வது வார்டுக்கு உள்பட்ட மூலப்பாளையம் கக்கன்ஜி நகர் பகுதியில் தடுப்பூசி போடும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமை மேயர் ப.மல்லிகா பரமசிவம் தொடங்கிவைத்தார். துணை மேயர் கே.சி.பழனிசாமி தலைமை வகித்தார்.
இம்முகாமில் வெளிநாட்டு கால்நடை மருத்துவர்கள் 10 பேர் கொண்ட
குழுவினர், தெருநாய்களுக்கு தடுப்பூசி போட்டனர். மேலும் அப்பகுதியில்
உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இதுவரை 500-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி, மாநகராட்சி
பொறியாளர் (பொ) ஆறுமுகம் உதவி ஆணையர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.