காஞ்சிபுரம் நகராட்சியில் 5,008 குழந்தைகள் பிறப்பு
காஞ்சிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டில் 5,008 குழந்தைகள் பிறந்துள்ளன.
காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனை, நகராட்சி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன.
இங்கு காஞ்சிபுரம் நகராட்சி மக்களைத் தவிர காஞ்சிபுரம், வாலாஜாபாத் சுற்றுப்பகுதி மக்கள், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள் அதிகளவில் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
குறிப்பாக பிரசவத்துக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மட்டும் மாதத்துக்கு 300 முதல் 400 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் கடந்த 2013-ஆம் ஆண்டில் 2,634 ஆண் குழந்தைகள், 2,374 பெண் குழந்தைகள் என மொத்தம் 5,008 குழந்தைகள் பிறந்துள்ளன.
2012-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் நகராட்சியில் 5,760 குழந்தைகள் பிறந்துள்ளன. 2011-ஆம் ஆண்டு 5,829 குழந்தைகளும், 2010-ஆம் ஆண்டு 5,170 குழந்தைகளும், 2009-ஆம் ஆண்டு 5,964 குழந்தைகளும் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.