தினமணி 07.11.2013
பாண்டி பஜாரில் 510 நடைபாதை கடைகள் அகற்றம்
தினமணி 07.11.2013
பாண்டி பஜாரில் 510 நடைபாதை கடைகள் அகற்றம்
தியாகராய நகர் பாண்டி பஜார் பகுதியில் இருந்த நடைபாதை கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினர்.
சென்னையின் நெரிசல் மிகுந்த பாண்டி பஜார், உஸ்மான் சாலை, தியாகராயர்
சாலை உள்ளிட்ட சாலைகள் மற்றும் தெருக்களில் நூற்றுக்காணக்கான கடைகள் இயங்கி
வந்தன. இதனால், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.
இந்த நிலையில், பாண்டி பஜார் பகுதியில் உள்ள நடைபாதைக் கடைகளை அகற்ற
வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதி
மன்றம் அக்டோபர் 20-ஆம் தேதிக்குள் கடைகளை அகற்றவேண்டும் என்று
உத்தரவிட்டது.
ஆனால் நடைபாதை வியாபாரிகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கூடுதல் கால
அவகாசம் கேட்டதையடுத்து, நவம்பர் 5-ஆம் தேதி வரை வாய்மொழியாக அவகாசம்
வழங்கப்பட்டது. இந்த அவகாசமும் முடிவடைந்ததால், மாநகராட்சி அதிகாரிகள்
புதன்கிழமை கடைகளை அகற்றினர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:
நடைபாதை வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்ததையடுத்து,
கடைகள் அகற்றப்பட்டன. அதிகாரிகள் கடைகளை அகற்ற வருவதை கண்ட, வியாபாரிகளே
தங்கள் பொருள்களை அப்புறப்படுத்தினர்.
கடைகள் அமைக்க பயன்படுத்தப்பட்ட மரக்கட்டைகள், பலகைகள் ஆகியவற்றை மட்டும் அதிகாரிகள் லாரிகள் மூலம் அகற்றினர்.
இந்த நடவடிக்கையில் அந்தப் பகுதியில் இருந்த 510 நடைபாதை கடைகள்
அகற்றப்பட்டன. இன்னும் 60 முதல் 70 கடைகள் மட்டுமே அகற்றப்படவேண்டும்.
அவையும் வியாழக்கிழமையன்று அகற்றப்பட்டு விடும்.
புதிய வணிக வளாகம்: நடைபாதை வியாபாரிகளுக்காக பாண்டி பஜார் பகுதியிலேயே
ரூ. 4.5 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது. கட்டடம் கட்டி 3
ஆண்டுகள் ஆகியும் கடைகள் அகற்றப்படாமலேயே இருந்தன.
நீதிமன்ற தீர்ப்பு மற்றும் மாநகராட்சியின் நடவடிக்கைகளையடுத்து வணிக வளாகத்தினுள் கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடைகளை முழுமையாக அமைத்த வியாபாரிகள் வளாகத்துக்குள் சென்று விட்டனர்.
மற்றவர்கள், கடைகளை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வளாகத்தில் மொத்தம் 627 கடைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
85 போலீஸார்: கடைகளை அகற்ற புதன்கிழமை காலை 10 மணி அளவில் மாநகராட்சி
அதிகாரிகள் பாண்டி பஜார் பகுதிக்கு சென்றனர். கடைகளை அகற்றும்போது
அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாதவாறு தடுக்க 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில்
85 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று அதிகாரிகள்
தெரிவித்தனர்.
வெளியில் கடை அமைத்த பூமாலை வியாபாரிகள்: இந்த நடவடிக்கையின் ஒரு
பகுதியாக நடைபாதைகளில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 16 பூமாலை கடைகளும்
அகற்றப்பட்டன. அவர்கள் கட்டடத்தின் உள்ளேயே வரிசையாக கடைகள்
ஒதுக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கு மாநகராட்சி மறுப்பு தெரிவிப்பதால், வளாகத்தின் உள்ளே சுற்றுச்சுவரை ஒட்டிய இடங்களில் கடைகளை அமைத்துள்ளனர்.