தினமலர் 22.08.2013
52 பேரூராட்சியில் பிளாஸ்டிக் அரவை இயந்திரம் நிறுவ…திட்டம்! சேலம், நாமக்கல் மாவட்ட சாலைப்பணிக்கு பயன்
நாமக்கல்: சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும், கழிவு பிளாஸ்டிக் பேப்பர்களை அரவை செய்யும் இயந்திரம் பொருத்தப்பட உள்ளது. இயந்திரத்தில் தூளாக்கப்படும் அந்த பிளாஸ்டிக் கழிவுகள், சாலைப்பணிக்கு பயன்படும் தாருடன் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம், பேரூராட்சிகளுக்கு கூடுதல் வருவாய்க்கு வழி கிடைத்துள்ளது.
சேலம் மாவட்டத்தில், 33 பேரூராட்சிகளும், நாமக்கல் மாவட்டத்தில், 19 பேரூராட்சிகளும் உள்ளன. மாநகராட்சி, நகராட்சி போல், பேரூராட்சியிலும் அந்த நிர்வாகம் மூலம் வார்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படுகிறது. தூய்மையான நகரை உருவாக்க வேண்டும் என, அரசு வேண்டுகோள் விடுத்தாலும், கழிவுகளை ஆங்காங்கே கொட்டி சிலர் அசிங்கப்படுத்தி விடுகின்றனர். பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பு பற்றி, பொதுமக்களுக்கு நன்கு தெரிந்திருந்தபோதும், அவற்றை வீதியில் வீசியெறிந்து, இயற்கைக்கு எதிரான கெடுதலை உருவாக்கி வருகின்றனர்.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில், பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தாலும், வியாபார கடைகளில் பொருட்களின் பேக்கிங், பிளாஸ்டிக் கவர் மூலமே உள்ளது. தற்போது, சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 52 பேரூராட்சிகளிலும், முற்றிலுமாக பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள், வாரத்தில் ஒரு நாள், அந்த நாள், எந்த நாள் என்பதை யாருக்கும் சொல்லாமல் திடீர் ஆய்வு நடத்த வேண்டும். ஆய்வின்போது, 40 மைக்ரான் அளவுள்ள பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்ய வேண்டும் என, பேரூராட்சி உதவி இயக்குனர் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவு பேப்பர்களை, குப்பையில் போட்டு விடாமலும், துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து மீட்டு வரும் பிளாஸ்டிக் பேப்பர்களை, அதற்கென உள்ள இயந்திரம் மூலம் அரவை செய்து, சாலைப்பணிக்கு பயன்படுத்தும் தாருடன் சேர்க்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஒரு சில மாவட்டங்களில், தற்போது இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
சேலத்தில், வாழப்பாடி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம் பேரூராட்சியில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், அந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில், பொத்தனூர், பட்டணம் உள்ளிட்ட இடங்களில் உள்ளது. இரண்டு மாவட்டத்திலும் உள்ள அனைத்து பேரூராட்சியிலும், அந்த இயந்திரத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படுவதுடன், இயற்கைக்கும் பாதிப்பு ஏற்படாது என அதிகாரிகள் கூறினர்.
சேலம் மண்டல உதவி இயக்குனர் பழனியம்மாள் கூறியதாவது:
சேலம், நாமக்கல் மாவட்டத்தில், ஒரு சில பேரூராட்சிகளில், பிளாஸ்டிக் அரவை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பேப்பர்களை தூளாக்கி, அவற்றை மொத்தமாக விற்பனை செய்வோம். அவர்கள், தாருடன் சேர்ந்து சாலைப்பணியை மேற்கொள்வர். ஒரு கிலோ, 25 ரூபாய் என விலைபோகும். பேரூராட்சிகளுக்கு, இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அனைத்து பேரூராட்சியிலும், இந்த இயந்திரத்தை பொருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். பொதுமக்கள் மத்தியிலும், இதற்கு வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
“நாப்கின்’ எரியூட்டு கருவி கழிவறைகளில் அமைப்பு
சேலம் மண்டலத்தில் உள்ள, அனைத்து பேரூராட்சி பொது கழிவறைகளிலும், குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் கழிவறைகளில், நாப்கின் எரியூட்டும் கருவி அமைக்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில், குப்பைத் தொட்டியிலும், சாக்கடையிலும், வீதியிலும் ஆங்காங்கே வீசி எறிகின்றனர். இதனால், கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இவற்றை தவிர்த்து, அந்த கருவிகளில் நாப்கினை போட்டால், அவை தானாகவே எரிந்து சாம்பலாக வெளிவந்துவிடும். புதியதாக கட்டப்படும் பொது கழிப்பிடங்களில் அந்த கருவி பொருத்தப்படுகிறது. பெண்கள் அதை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, சுகாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும் என உதவி இயக்குனர் பழனியம்மாள் வலியுறுத்தி உள்ளார்.