தினகரன் 22.11.2010
திருப்புவனம் பேரூராட்சியில் சிமென்ட் சாலை பணிகளுக்கு ரூ.54 லட்சம் ஒதுக்கீடு
திருப்புவனம், நவ. 22: திருப்புவனம் பேரூராட்சி கூட்டம் தலைவர் பிச்சைமுத்து வைரவன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கனகு முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி சஞ்சீவி மற்றும் 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தலைவர் பேசுகையில், “சிறப்பு சாலை திட்டத்தில் 1, 2, 6, 7, 12, 17 ஆகிய வார்டுகளில் சிமென்ட் சாலை அமைக்க ரூ.54 லட்சத்து 80 ஆயிரமும், மானாமதுரை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் புதூரில் அங்கன்வாடி மையம் கட்ட ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்புவனம் புதூர் மயானம் ரூ.5 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்படும். பொது நிதி மூலம் தேரடியில் பொதுக்கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதி, 2, 5, 6, 8, 11, 15 ஆகிய வார்டுகளில் வடிகால் சீரமைப்பு, பசும்பொன் நகரில் சிறிய பாலம், புதூரில் நீர்மாலை தொட்டி அமைத்தல் ஆகிய பணிகளை ரூ.6 லட்சம் மதிப்பில் செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.’’ என்று தெரிவித்தார். கூட்டத்தில் 16வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரன் தனது வார்டில் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி பணிகள் மறுக்கப்படுவதாக கூறி வெளிநடப்பு செய்தார்.