ரூ.54 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்
காஞ்சிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.54.50 லட்சத்தில் மேம்பாட்டு திட்டப் பணிகளை விஸ்வநாதன் எம்.பி. புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஐயம்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் துணை சுகாதார நிலையம் முத்தியால்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. துணை சுகாதார நிலையத்தின் பழைய கட்டங்களை புதுப்பிக்க வேண்டும். கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் பேரில், அப்பணிகளுக்கு காஞ்சிபுரம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்குவதாக விஸ்வநாதன எம்.பி. உறுதியளித்திருந்தார்.
அதன்படி முத்தியால்பேட்டு துணை சுகாதார நிலைய பழையக் கட்டடம் புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு ரூ.15 லட்சம் ஒதுக்கப்பட்டது. புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடந்தது.
விஸ்வநாதன் எம்.பி. அடிக்கல் நாட்டினார். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணராஜ், ஊராட்சித் தலைவர் ஜோதியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் சுப்பராய முதலியார் உயர்நிலைப்பள்ளியில் ரூ.6 லட்சம் செலவில் கூடுதல் பள்ளிக் கட்டடத்துக்கும் எம்.பி. அடிக்கல் நாட்டினார். காஞ்சிபுரம் நகராட்சி சிங்கபெருமாள் கோயில் மாடவீதி முதல் விளக்கொளி பெருமாள் கோயில் தெரு வரை ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
காது கேளாதோர் பள்ளியில் ரூ.3 லட்சத்தில் சமையலறைக் கட்டடம், தலா ரூ.3 லட்சம் செலவில் காஞ்சிபுரம் ஜவஹர்லால் தெருவில் ஆழ்குழாய் கிணறு, தண்ணர் தொட்டி மற்றும் மின் கோபுர விளக்கு,
நகராட்சி சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் ரூ.5 லட்சத்தில் புதிய பள்ளிக்கட்டடம், ரூ.2 லட்சத்தில் புத்தேரி தெருவில் பயணிகள் நிழற்குடை, ரூ.2.5 லட்சம் செலவில் கைலாசநாதர் கோயில் தெருவில் சத்துணவுக் கூடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.