தினமணி 16.12.2009
உப்பிடமங்கலத்தில் ரூ.54.55 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்
கரூர், டிச. 15: உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிகளில் ரூ.54.55 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது என்று பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உப்பிடமங்கலம் பேரூராட்சியின் சாதாரணக்கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவர் ராஜலிங்கம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் என்.ஆர். மனோகரன், செயல் அலுவலர் உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நபார்டு திட்டத்தின் கீழ் கருப்பம்பாளையம்–மாமரத்துப்பட்டி வரை ரூ. 15.25 லட்சத்தில் தார்ச்சாலை, குளத்துப்பாளையத்தில் ரூ.15.30 லட்சத்திலும், புகையிலைக்குறிச்சியானூர் முதல் சடச்சியம்மன் கோயில் வரை ரூ.15.25 லட்சத்தில் தார்ச்சாலை அமைப்பது, 2009-10-ம் ஆண்டில் 12-வது நிதிக்குழு மானியத்தில் வையாபுரிக்கவுண்டனூரிóல் ரூ.1.20 லட்சத்தில் வடிகால், குப்பகவுண்டனூரில் ரூ.1.80 லட்சத்தில் சிமென்ட் சாலை, லிங்கத்தூரிலுள்ள மண்புழு உரத்தொட்டியைச் சுற்றி ரூ.1.75 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைப்பது. சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காக ரூ.4 லட்சத்தில் சமுதாயக் கூடம் ஆகிய பணிகளை ரூ. 54.55 லட்சத்தில் செய்து முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சிப் பகுதிகளில் பசுமைத்தாய் இயக்கம் மற்றும் வனத் துறையுடன் இணைந்து மரக்கன்றுகள் நடுவது, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்காக பெறப்பட்ட கடன் ரூ.72 லட்சத்தை திரும்ப செலுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பேரூராட்சி உறுப்பினர்கள் அர்ச்சுணன், செல்லப்பன், தங்கவேல், ருக்மணி,ராஜகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.