தினமணி 13.10.2010
5.5 லட்சம் மாணவர்களுக்கு இன்று குடற்புழு நீக்க மாத்திரைசென்னை, அக். 12: சென்னையைச் சேர்ந்த 5.5 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் குடற்புழுக்கள் நீக்க தினமான புதன்கிழமை (அக்.13) இலவசமாக வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் பெ. குகானந்தம் தெரிவித்தார்.
இகு குறித்து மேலும் அவர் கூறியது:“”சென்னை மாநகராட்சியின் சார்பில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள “ஆல்பென்டசோல்‘ என்ற குடற்புழு நீக்க மாத்திரை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 400 மில்லி கிராம் எடை கொண்ட இந்த மாத்திரை, எளிதில் மென்று சாப்பிடக் கூடியது. இரண்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதைச் சாப்பிடலாம்.
குடற்பகுதியில் உள்ள அனைத்து குடற்புழுக்களையும், அதன் முட்டைகளையும், வயிற்றுப்போக்கோ அல்லது வாந்தியோ ஏற்படுத்தாமல் அழிக்கும். இதனால் நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகள், குறிப்பாக இரும்புச் சத்து உடலின் இயக்க மண்டலத்துக்கு முழுமையாகச் சென்றடையும். மேலும் இந்த புழுக்களால் ஏற்படும் ரத்த சோகை நோய் இளம் மாணவர்களுக்கு உடல் நலம் மற்றும் மன வளர்ச்சி சார்ந்த பிரச்னைகளைக் குறைக்கும்.
மேலும் மாணவர்களுடைய சோர்வு மற்றும் சுறுசுறுப்பின்மை, கல்வி கற்கும் திறன் குறைதல், எதிர்மறையான சிந்தனைகள் உருவாகுதல், பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் உடல்நலக் கேடுகள் ஆகியவற்றை போக்க வல்லது.“ஆல்பென்டசோல்‘ மாத்திரையைச் சாப்பிடுவதால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது” என்றார் டாக்டர் பெ.குகானந்தம்.