தினகரன் 19.10.2010
விழுப்புரம் நகராட்சியில் ரூ5.50கோடிவரிபாக்கி வார்டு வாரியாக சிறப்பு முகாமுக்கு கோரிக்கைவிழுப்புரம், அக். 19: விழுப்புரம் நகராட்சியில் வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி ரூ5.50 கோடி நிலுவையில் உள்ளது.
தமிழகம் முழுவதும் நகராட்சிகளில் வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் பின் தங்கிய மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் நகராட்சியில் வீட்டுவரி உயர்த்தப்படவில்லை. வரியை உயர்த்தாமல் ரூ35 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், ரூ10 கோடியில் குடிநீர் திட்டம், ரூ.ஒரு கோடியில் நவீன எரிவாயு தகன மேடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
மின் விளக்குகள், ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்படுகிறது. மேலும் வீடுகளுக்கு நேரிடையாக சென்று குப்பைகள் பெறப்படுகிறது. இதுதவிர பாதாள சாக்கடை திட்டத்துக்கு தோண்டப்பட்ட பள்ளங்களால் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. முதல்கட்டமாக ரூ7 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. விழுப்புரம் நகராட்சியில் பல கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் மேலும் விரிவுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது. அவர்கள் செலுத்த வேண்டிய வீட்டு வரி மற்றும் குடிநீர் வரி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது.
விழுப்புரம் நகராட்சியில் உள்ள சுமார் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மூலம் ரூ4 கோடியே 70 லட்சத்து 70 ஆயிரத்து 116 வசூல் செய்ய வேண்டியுள்ளது. இதேபோல் 6274 குடிநீர் இணைப்புகள் மூலம் ரூ83 லட்சத்து 87 ஆயிரத்து 599 வசூல் செய்ய வேண்டியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வரை மொத்தம் ரூ.5 கோடியே 54 லட்சத்து 57 ஆயிரத்து 715 நிலுவையில் உள்ளது. வரி செலுத்துவதில் நடுத்தர மக்கள் முதலிடம் வகிக்கின்றனர்.
வரிபாக்கியை வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்ட வேண்டும். தீவிர வரி வசூல் வாரம் நடத்த வேண்டும். ஒவ்வொரு வார்டாக சென்று சிறப்பு முகாம்களை நடத்தி வரி வசூலித்து அங்கேயே கணினி ரசீது வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீடுகளுக்கு செல்லும் வகையில் முன் அறிவிப்பை முறையாக செய்ய வேண்டும். இதன்மூலம் நிலுவையில் உள்ள வரியில் சுமார் 20 சதவீத தொகை வசூலிக்க வாய்ப்புள்ளதாக வரி செலுத்துவோர் கூறுகின்றனர்.
வரி வசூலிக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகத்தோடு அந்தந்த வார்டு கவுன்சிலர்களும் இணைந்து செயல்பட்டால் முழுபலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் வரி செலுத்துவோரிடம் உள்ளது.